| ADDED : மே 09, 2024 11:19 PM
சென்னை : பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 12,000த்துக்கும் அதிகமான நெல் மூட்டைகள் புதன்கிழமை பெய்த கோடை மழையில் நனைந்து சேதமடைந்தன. ஆனால், விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் பாதிக்கப்படவில்லை; கொள்முதல் செய்யப்பட்ட, 4,500 நெல் மூட்டைகள் மட்டுமே சிறிதளவு பாதிக்கப்பட்டதாக ஒழுங்குமுறை விற்பனை கூட நிர்வாகம் கூறியுள்ளது. இது அப்பட்டமான பொய்.செஞ்சியில் மழையால் பாதிக்கப்பட்ட நெல் மூட்டைகளில் பெரும்பாலானவை விவசாயிகளுக்கு சொந்தமானவை. விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை வைக்க கட்டப்பட்ட கிடங்கில், வணிகர்களால் கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகள் மட்டுமே சட்டவிரோதமாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.விவசாயிகளின் நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததற்கு இதுவே காரணம். இந்த மோசடியை மூடி மறைக்கவே ஒழுங்குமுறை விற்பனை கூட நிர்வாகம் பொய்களை கட்டவிழ்த்து விடுகிறது. இது கண்டனத்திற்குரியது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுதும் அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் தலா, 10,000 மூட்டைகளை சேமிக்கும் அளவுக்கு கிடங்கு வசதியை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.