28 கைதிகளுக்கு 37 போலீஸ்; ஆத்துார் சிறை தற்காலிக மூடல்
ஆத்துார் : நுாற்றாண்டுகளை கடந்த ஆத்துார் மாவட்ட சிறையை மேம்படுத்த திட்டமிட்டு, தற்காலிகமாக சிறை மூடப்பட்டுள்ளது.சேலம் மாவட்டம், ஆத்துார் தாலுகா அலுவலக வளாகத்தில், 1901ல், கிளைச்சிறை துவங்கப்பட்டு, 2008ல் மாவட்ட சிறையாக தரம் உயர்த்தப்பட்டது. அங்கு, 200 பேரை அடைக்கலாம்.நேற்று முன்தினம், அங்கிருந்த, 28 கைதிகள், சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். அங்கிருந்த 37 போலீசாரும், மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர். தளவாடப் பொருட்கள், துப்பாக்கி உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள், தனி வாகனத்தில் நேற்று சேலத்திற்கு கொண்டு சென்றனர்.இதுகுறித்து, சேலம் மத்திய சிறை எஸ்.பி., வினோத் கூறுகையில், ''சேலம் மத்திய சிறையில், 1,431 கைதிகளை அடைக்கலாம். தற்போது, 1,226 கைதிகள் உள்ளனர். தர்மபுரி மாவட்ட சிறையில், 187 பேர் உள்ளனர். ஆத்துார் மாவட்ட சிறையில் ஓராண்டாக, 28 கைதிகள் மட்டும் இருந்தனர். 37 போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். கைதி எண்ணிக்கை குறைவாக இருந்ததால் தற்காலிகமாக மூட, தமிழக சிறைத்துறை டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் தெரிவித்தார். அதேநேரம் இச்சிறையில் வேறு கைதிகளை அடைப்பது தொடர்பாக உயர் அதிகாரிகள் ஆலோசிக்கின்றனர்,'' என்றார்.இலங்கை தமிழர், வெளிமாநில, வெளிநாடுகளைச் சேர்ந்த கைதிகளுக்கு தனியே சிறை இல்லை. இதனால், ஆத்துாரில் உள்ள மாவட்ட சிறையை புதுப்பித்து வெளிமாநில, வெளிநாட்டு சிறைக்கைதிகளை அடைப்பதற்கான சிறையாக மாற்ற, சிறைத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.