கோவளம் அருகே கோர விபத்து லாரி மீது கார் மோதி 4 பேர் பரிதாப பலி
சென்னை:சென்னை கிழக்கு கடற்கரை சாலை கோவளம் அருகே, லாரி மீது கார் மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்தனர்.சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த முகமது ஆசிக், 30, என்பவர், மலேஷியாவில் இருந்து இலங்கை வழியாக சென்னை விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் நள்ளிரவு வந்துள்ளார்.இவரை, ராயப்பேட்டையைச் சேர்ந்த ஆதில் முகமது, 19, அஸ்லுாப் முகமது, 22, இப்ராகிம், 22, ஆகியோர் வரவேற்று, 'ஹோண்டா சிட்டி' காரில் மாமல்லபுரம் நோக்கி சென்றுள்ளனர்.இம்மூவரும் பர்மா பஜாரில் மொபைல் போன், 'சிசிடிவி' கேமரா விற்பனை கடை நடத்துபவர்கள். மாமல்லபுரத்தில் முக்கிய இடங்களுக்கு சென்று, நேற்று அதிகாலை சென்னை நோக்கி, இ.சி.ஆர்., சாலையில் காரில் நால்வரும் அதிவேகத்தில் வந்து கொண்டிருந்தனர்.அப்போது, கோவளம் அடுத்த செம்மஞ்சேரி பேருந்து நிறுத்தம் அருகே, சாலையோரம் 'எய்ச்சர்' லாரி நிறுத்தப்பட்டு இருந்தது. பழுது காரணமாக நிறுத்தப்பட்ட இந்த லாரியின் மீது மோதி, கார் விபத்துக்குள்ளானது. கார் வந்த வேகத்தில், லாரியின் பின்பகுதியில் குத்தி திரும்பி, முழுதாக சிக்கிக்கொண்டது.கேளம்பாக்கம் போலீசார், பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சிறுசேரி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர்.இழுவை வாகனத்தை வைத்து, லாரியின் அடியில் சிக்கிய காரை வெளியே எடுத்தனர். காரில் இருந்த நான்கு வாலிபர்களும் சம்பவ இடத்திலேயே இறந்து, உடல் பாகங்கள் உருக்குலைந்தன.நான்கு சடலங்களையும் கைப்பற்றிய போலீசார், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். காரில் பேக்கிங் செய்யப்பட்டு இருந்த ஒரு பெட்டியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி ஓட்டுனர் ரங்கநாதன், 55, என்பவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர். தவிர, அப்பகுதி 'சிசிடிவி' கேமரா பதிவுகளை வைத்து, மது போதையில் விபத்து நடந்ததா அல்லது கட்டுப்பாட்டை இழந்து கார் விபத்தில் சிக்கியதா என, போலீசார் விசாரிக்கின்றனர்.