உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுக்கூடமாக மாறியது காய்கறிகள் பதப்படுத்தும் நிலையம்

மதுக்கூடமாக மாறியது காய்கறிகள் பதப்படுத்தும் நிலையம்

சென்னை : திருவள்ளூர் மாவட்டம் ஆரணியில், விவசாயிகள் பயன்பாட்டிற்காக, 4.20 கோடி ரூபாயில் தமிழக அரசு கட்டிய காய்கறிகள் பதப்படுத்தும் நிலையம், வேளாண் வணிகப்பிரிவு அதிகாரிகளின் அலட்சியத்தால், மதுக்கூடமாக மாறியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் ஆரணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கத்தரிக்காய், பச்சை மிளகாய், வெண்டைக்காய், பாகற்காய், புடலங்காய், முள்ளங்கி, வெள்ளரிக்காய், அரைக்கீரை, சிறுகீரை, முருங்கை கீரை, முளைக்கீரை உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன. கோடையில், தர்ப்பூசணி, கிர்ணி, முலாம்பழம் உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன.

இவை எல்லாம் ஆரணி சந்தைக்கு எடுத்து வரப்பட்டு, மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது. நாள்தோறும், 20 டன் காய்கறிகள் விற்பனையாகி வருகின்றன. திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மட்டுமின்றி, ஆந்திர மாநில வியாபாரிகளும், இங்கு வந்து காய்கறிகள் வாங்கிச் செல்கின்றனர்.அதிக விளைச்சல் உள்ள காலங்களில், காய்கறிகள், பழங்கள் விற்பனையின்றி வீணாகி வந்தன. இதை கருத்தில் வைத்து, குளிர்பதன கிடங்கு வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என, மாவட்ட கலெக்டரிடமும், வேளாண்துறை உயர் அதிகாரிகளிடமும், விவசாயிகள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. அவர்களின் கோரிக்கையை ஏற்று, ஒர் ஆண்டிற்கு முன், ஆரணி சந்தையிலிருந்து, 100 மீட்டர் துாரத்தில் உள்ள, 80 சென்ட் அரசு நிலத்தில், முதன்மை பதப்படுத்தும் நிலையம் கட்டப்பட்டது. இங்கு, மூட்டை கட்டும் அறை, குளிர்பதன கிடங்கு, சேமிப்பு கிடங்கு, சுத்தம் செய்தல், தரம் பிரித்தல் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கட்டுமான பணிக்காக, 4.20 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இங்கு, 25 டன் காய்கறிகளை பதப்படுத்தும் வகையில், குளிர்சாதன அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதுமட்டுமின்றி, 100 டன் காய்கறிகளை கையாளவும் வசதி செய்யப்பட்டு உள்ளது.தனியார் ஆக்கிரமிப்பில், 30 ஆண்டுகளாக இருந்த இடத்தை மீட்டு, முதன்மை பதப்படுத்தும் நிலையத்தை, வேளாண் வணிக பிரிவினர் கட்டினர். இந்த முதன்மை பதப்படுத்தும் நிலையத்தை, தங்கள் பொறுப்பில் ஒப்படைக்க வேண்டும் என, விவசாய குழுக்கள் வலியுறுத்தின. ஆனால், பல்வேறு மாவட்டங்களில், இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள், முறையாக செயல்படவில்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க, வேளாண் வணிகப்பிரிவு இயக்குனரால் முடிவு செய்யப்பட்டது. மாதம், 90,000 ரூபாய் வாடகை அடிப்படையில், மாம்பழம் விற்பனையாளரிடம், இந்த பதப்படுத்தும் நிலையம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.மாம்பழங்களை தரம் பிரித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு தேவையான இயந்திரங்களை வழங்குவதாக, காஞ்சிபுரம் மாவட்ட தமிழக வேளாண் விற்பனை குழு உறுதியளித்துள்ளது. இதற்கான பணிகள் நடந்து வந்த நிலையில், பதப்படுத்தும் நிலையத்தை பயன்படுத்தாமல் ஒப்பந்த நிறுவனம் சென்று விட்டது. இந்தப் பிரச்னையால், இந்த முதன்மை பதப்படுத்தும் நிலையம் ஓராண்டாக திறந்தே கிடக்கிறது. இதை, வேளாண் வணிகப்பிரிவு அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. தற்போது, பதப்படுத்தும் நிலையம், மதுகுடிக்கும் நிலையமாக மாற்றப்பட்டு உள்ளது. கட்டடம் மட்டுமின்றி, அதைச் சுற்றியுள்ள காலியிடங்களில் மதுபாட்டில்கள், குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் சிதறி கிடக்கின்றன. மின்விசிறிகள், விளக்குகள் மட்டுமின்றி, குளிர்சாதன பொருட்களை இயக்குவதற்கான விலை உயர்ந்த மின்சாதனங்களும் திருடப்பட்டு விட்டன. கழிப்பறை மற்றும், வாஷ் பேசின் செயற்கை மேற்கூரைகளும் சேதப்படுத்தப்பட்டு உள்ளன. பதப்படுத்தும் நிலையத்தை மீண்டும் கட்டமைக்க, 20 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.காவலாளிகள், 'சிசிடிவி' கேமரா வசதிகள் செய்யப்படாததால், இங்குள்ள குளிர்சாதன இயந்திரங்கள், ஜெனரேட்டர் உள்ளிட்டவற்றுக்கும் பாதுகாப்பு இல்லை. இனியாவது, இந்த முதன்மை பதப்படுத்தும் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர, அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்'விரைவில் பயன்பாட்டிற்கு வரும்'ஆரணி காய்கறிகள் பதப்படுத்தும் நிலையத்தில், பொருட்கள் திருடு போனது குறித்தும், சமூகவிரோத செயல்கள் நடப்பது குறித்தும் போலீசில் முறைப்படி புகார் செய்யப்பட்டு உள்ளது. ஆரணி போலீசார் விசாரிக்கின்றனர். பதப்படுத்தும் நிலையத்தை விவசாயிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, முன்பிருந்த அதே கட்டணத்தை நிர்ணயம் செய்து, ஒப்பந்தம் கோரியுள்ளோம். ஒப்பந்தம் பெற மூன்று நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளன. விரைவில் ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டு, பதப்படுத்தும் நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.- ஜீவராணி, துணை இயக்குனர், திருவள்ளூர் மாவட்ட வேளாண் வணிகப்பிரிவு

திருத்தணிக்கு மாற்றாக ஆரணி!

அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்பை குறைத்து, உற்பத்தியாகும் பொருட்களின் உபரியை மதிப்பு கூட்டி விற்பனை செய்வதற்காக, முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. முதற்கட்டமாக, 11 மாவட்டங்களில், 64 முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள், 482 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. இரண்டாம் கட்டமாக சேலம், ஈரோடு, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவண்ணாமலை, கடலுார், விழுப்புரம், கரூர் ஆகிய மாவட்டங்களில், 20 முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள், 103 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டு உள்ளன. இதில், திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர் மற்றும் திருத்தணியில் முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது. வேளாண் வணிகப்பிரிவினர் முயற்சியால், திருத்தணிக்கு மாற்றாக காய்கறிகள், கீரைகள் அதிகம் விளையும் ஆரணி தேர்வு செய்யப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்