உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்றைய இதழியலின் முன்னோடி டி.வி.ஆர்., நினைவுநாள்

இன்றைய இதழியலின் முன்னோடி டி.வி.ஆர்., நினைவுநாள்

இந்திய சுதந்திர போராட்ட காலத்தில், மக்களிடம் சுதந்திர உணர்வை ஊட்ட பல பத்திரிகைகள் உருவாகின. காந்தியும், ராஜாராம் மோகன்ராயும், பாரதியாரும் ஆசிரியர்களாக இருந்து வெளியிட்ட பிரசார பத்திரிகைகள் ஏராளம். சுதந்திரம் பெற்ற பின்பு, மக்களிடம் தகவலை, செய்தியை சொல்லும் விதமாக பத்திரிகைகளின் போக்கு மாறியது. அரசின் தகவல்களை, அரசியல் செய்திகளை, நாட்டில் நடப்பனவற்றை மட்டுமே பத்திரிகைகள் மக்களுக்கு அதிகமாக எடுத்துச் சென்றன. ஆனால் அதற்கு நேர்மாறாக மக்களின் பிரச்னைகளை, சமூகத்தின் அடிப்படை குறைகளை, வளர்ச்சிக்கான வழிகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், 'பத்திரிகையின் பார்வையை' திசை திருப்பியவர் 'தினமலர்' நாளிதழை நிறுவிய டி.வி.ராமசுப்பையர்.

வளர்ச்சிக்கான கருவி

மேற்கத்திய நாடுகளில் வெறுமனே செய்திகளை மட்டும் தந்து கொண்டிருந்த பத்திரிகைகள், 1970களுக்கு பின், 'மக்களின் குரலாக' அவர்களின் குறைகளை, தேவைகளை எழுதத் துவங்கின. ஆனால் அதை, 1955- - 1960களிலேயே ஆரம்பித்து, சாதித்துக்காட்டியவர் டி.வி.ஆர்., பத்திரிகையை மக்களின் வளர்ச்சிக்கான கருவியாக கண்டார். தற்போது நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் எல்லாம் மக்கள் பிரச்னைகள், அடிப்படை தேவைகள் பற்றி எழுதவும், பேசவும் செய்கின்றன. ஆனால் இதற்கு அன்றே அடித்தளமிட்டவர் டி.வி.ஆர்.,பத்திரிகைகள், செய்தி, ஊடகங்கள் பற்றி படிக்கும் படிப்பு 'இதழியல்' என அறியப்படுகிறது. இதழியலின் நவீன கோட்பாடு 'வளர்ச்சிக்கான இதழியல்!' அதாவது, 'செய்திகள் வெளியிடுவதன் வாயிலாக மக்களின் சமூக, பொருளாதார, கலாசார வளர்ச்சியில் பங்கேற்று, நாட்டின் வளர்ச்சிக்கு துாண்டுகோலாக இருப்பது' தான் வளர்ச்சிக்கான இதழியல்.இதழியல் என்ற பாடப்பிரிவு இல்லாதபோதே, இன்றைய இதழியல் கோட்பாட்டிற்கு முன்னோடியாக இருந்து பாதை அமைத்திருக்கிறார் டி.வி.ஆர்., என்றால், அவர் பத்திரிகை உலகின் தீர்க்கதரிசியே.மக்களின் தேவையை செய்தியாக வெளியிட்டு ஆட்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண்பதை அடிப்படை பத்திரிகைப் பணியாக கொண்டிருந்தார் அவர். அது நாட்டின் வளர்ச்சிக்கு நாளிதழ் வாயிலாக செய்யும் கடமை என்று நினைத்தார்.இன்று சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள் எல்லாம் 'ஊடகம்' என்று அறியப்படுகின்றன. மீடியா இல்லாத அன்றைய காலத்தில் மக்களுக்கும், அரசுக்குமான தொடர்பு ஊடகமாக தினமலர் நாளிதழை மாற்றிய 'மீடியேட்டர்' டி.வி.ஆர்., இதன்வாயிலாக தமிழ் சமூகம் பெற்றதும், கற்றதும் ஏராளம்.

தலையெழுத்தை மாற்றிய எழுத்து

அவரது எழுத்துப்பணி தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றியது. 'நைல் நதியை விட, தாமிரபரணி தான் முக்கியம்' என அவரே குறிப்பிடுவது போல, உள்ளூர் செய்திகளுக்கும் மக்களின் பிரச்னைகளுக்கும் முக்கியத்துவம் தந்து, தலைநகரில் இருந்த ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்த்தார். அன்றைய நாளிதழ்கள் உலகச்செய்தியை உள்ளூருக்கு கொண்டு வந்து கொண்டிருக்க, இவர் உள்ளூர் செய்திகளை உலகுக்கு கொண்டு செல்வதில் உறுதியாக இருந்தார். நல்ல வகையில் மக்கள் உயிர் வாழ, செய்திகள் உதவ வேண்டும் என்று நினைத்தவர். 'தகவல்களை தருவது மட்டுமே செய்தி அல்ல. நகரங்களில் நடப்பது மட்டுமே செய்தி ஆகி விடாது. கிராமங்களின் முன்னேற்றமே நாட்டை முன்னேற்றும்; கிராமங்களில் செய்திகளை தேடுங்கள்' என்று நிருபர்களுக்கு கட்டளையிட்டார். குடிநீர், தெருவிளக்கு, சுகாதாரம், சாலை, பஸ் வசதி, பள்ளிகள், மருத்துவமனைகள் என கிராமங்களுக்கு அடிப்படை கட்டமைப்புகள் தேவை என எழுதிக்கொண்டே இருந்தார். அவரது செய்திகளில் தொலைநோக்கு பார்வை இருக்கும்; பிரச்னைக்கான தீர்வும் இருக்கும். உதாரணமாக, குடிநீர் பஞ்சத்தில் தவித்த கோவில்பட்டி, எட்டயபுரத்திற்கு 35 கி.மீ., துாரத்தில் இருந்து தாமிரபரணி தண்ணீர் கொண்டு வருவது தான் ஒரே வழி என எழுதினார். அரசும் ஏற்றுக்கொண்டது. இன்று வெற்றிகரமாக செயல்படும் குடிநீர் திட்டத்திற்கு காரணமானவர் டி.வி.ஆர்.,

ஒரு பக்க செய்தி

உசிலம்பட்டி முதல் போடி வரை, 1975ல் பெரும் மணல்காற்று வீசியது. விவசாய நிலங்கள், கிணறுகள் மணலால் மூழ்கின. மரங்கள் சாய்ந்தன. விவசாயிகள் பெரும் துயரமடைந்தனர். மணலை அப்புறப்படுத்த தனி ஒரு விவசாயியால் முடியாது. ராட்சத இயந்திரங்கள் வரவேண்டும். அதற்கு அரசின் பார்வைக்கு தகவல் செல்வதே வழி. வெளிஉலகத்திற்கு தெரியாத இந்த தகவலை படங்களுடன் ஒருபக்க செய்தியாக வெளியிட, அதிகாரிகள் சென்னையில் இருந்து இயந்திரங்களுடன் வந்து விவசாயிகளுக்கு உதவினர். இதைப் பற்றி டி.வி.ஆர்., நிருபர்களிடம், 'இவையே அவசியமான செய்திகள். குடிகாரன் குடிபோதையில் யாரையாவது வெட்டி வீழ்த்தினால் அது முக்கிய செய்தி அல்ல; வாழ வேண்டிய, வாழ்விக்க வேண்டிய மனிதன் சாகும் நிலைக்கு போவதை எழுதுங்கள்' என்றார்.

டி.வி.ஆர்., சாதித்தது என்ன?

மலைகள், காடுகள் அழிவதால் பருவமழை பெய்யாது; நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறையும் என்று, இன்றைய 'புவி வெப்பமயமாதல்' நிலையை அன்றே உணர்ந்தவர் டி.வி.ஆர்., இதனால் கண்மாய், ஆறு, குளங்களை காக்க, தொடர்ந்து கட்டுரை வெளியிட்டார். 'நமது குளங்கள்' என்று டி.வி.ஆர்., 1963ல் வெளியிட்ட கட்டுரை தொடரை பார்த்து விட்டு, காமராஜர் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த ராமையா, எல்லா குளங்களையும் பார்வையிட்டு நடவடிக்கை எடுத்தார் என்பது அப்போதைய பத்திரிகை உலகின் ஆச்சரிய செய்தி.துாத்துக்குடி துறைமுகம் அமைந்ததில் டி.வி.ஆர்., பங்கு மிக முக்கியம். துறைமுகம் அமைந்தாலும், தொழிற்சாலைகள் வருமா என்று பிரச்னை கிளம்பிய போது, அங்கு என்னென்ன தொழில்கள் துவங்க வாய்ப்பு உள்ளது என்று பட்டியலிட்டது தினமலர். கடந்த, 1967ல் திடீரென துறைமுக உருவாக்கப்பணி நிறுத்தப்பட்டதும் வெகுண்டெழுந்தார் டி.வி.ஆர்., துறைமுகத்தின் அவசியம் குறித்து வர்த்தகர்கள், வல்லுனர்களின் பேட்டிகளை வெளியிட்டார். டில்லியில் பிரதமர் இந்திராவின் கவனத்திற்கு இது சென்றதும், 'துறைமுக திட்டம் கைவிடப்படாது' என அறிவித்தார்.கடந்த, 1974ல் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. இதனை தினமும் ஒரு பக்க செய்தியாக வெளியிட்டார் டி.வி.ஆர்., இதன்பிறகே வெளி உலகம் அறிந்தது. டில்லியில் இருந்த மத்திய உணவு அமைச்சர் ஷிண்டே, தினமலர் செய்தியின் ஆங்கில மொழிபெயர்ப்புடன் ராமநாதபுரம் வந்து ஆய்வு நடத்தி, டி.வி.ஆர்., முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தார்.

அன்றைய தலைவர்கள் சொன்னது

'குமரி மாவட்டத்திற்கு குடிநீர், ரயில் போக்குவரத்திற்கு முதலில் அரசின் உதவியை நாடினார் டி.வி.ஆர்., தினமலர் வலுவான செய்தித்தாளாக மாறியதும், அரசியல் தலைவர்கள் டி.வி.ஆரின் தயவை நாடினர். சமூக மாற்றத்திற்கு அரசியல் ஆதரவு, தினமலர் வழியாக டி.வி.ஆருக்கு எளிதாக கிடைத்தது; இது பெரும் சாதனை' என்றார், திராவிட மொழியியல் பள்ளியின் நிறுவனர், மறைந்த தமிழறிஞர் வி.ஐ.சுப்பிரமணியம்.'காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்று சொல்கிறோம். ஆனால் திருநெல்வேலி வரை தான் ரயில் பாதை. இதை தென்னிந்திய ரயில்வே என்று சொல்வது எப்படி பொருத்தமாகும்?' என்று 'நெத்தியடியாக' எழுதி, திருநெல்வேலி -- கன்னியாகுமரி -- திருவனந்தபுரம் ரயில்பாதை அமைய முழுமுதற் காரணமானார் டி.வி.ஆர்.,'இந்த ரயில்பாதை அமைப்பு முயற்சியிலும், சாதனையிலும், வெற்றியிலும் வேறு யாரும் பங்கு போட முடியாது. அனைத்தும் டி.வி.ஆரின் தினமலர் நாளிதழை சாரும்' என்றனர், அன்றைய எம்.பி.,க்கள் சிவன்பிள்ளையும், ரசாக்கும்.மக்களின் கவலைகளையும், தேவைகளையும் அரசு நிர்வாகத்திடம் எடுத்துச்செல்ல பத்திரிகையால் தான் முடியும் என்ற நிலையை உருவாக்கினார் டி.வி.ஆர்., அதை அப்படியே இன்றளவும் கடைப்பிடிப்பதால், மக்கள் மனதிற்குள் நம்பர் 1 நாளிதழாக தினமலர் வாழ்கிறது.'ஊரினை நாட்டை இந்த உலகினை ஒன்று சேர்க்கப்பேரறிவாளர் நெஞ்சிற்பிறந்த பத்திரிகைப் பெண்ணே' என்று பத்திரிகைகள் குறித்து பாரதிதாசன் பாடியது போல, அந்த பேரறிவாளர் டி.வி.ஆர்., நெஞ்சில் பிறந்த தினமலர், அவர் வழிகாட்டிய மக்கள் சேவையை தொடரட்டும்.

- ஜி.வி.ரமேஷ் குமார், பத்திரிகையாளர்

dinamalar.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ديفيد رافائيل
ஜூலை 21, 2024 22:21

எனக்கு தினமலர் ரொம்ப ரொம்ப பிடிக்கும். தினமலர் website ல மட்டும் தான் தினசரி 10 times படிக்குறேன். Thanks நான் பண்ற comments மட்டும் edit பண்றீங்க, நான் சாதாரண words use பண்ணி தான் message பண்றேன்.


Kasimani Baskaran
ஜூலை 21, 2024 20:20

திராவிடம் ஒரு திணிக்கப்பட்ட கோட்பாடு என்பதை தினமலர் இன்னும் தொடர வேண்டும். அதுதான் முன்னோடிகளுக்கு கொடுக்கப்படும் மரியாதையாக இருக்கும்.


VENKATESH RAJA
ஜூலை 21, 2024 12:49

இப்போது எனக்கு வயது 22.. நான் விவரம் தெரிந்த 7வயது முதல் ஐயா டி.வி.ஆர் நினைவு தினத்தன்று நினைத்து பார்க்காமல் இருந்த காலம் கிடையாது. இதனை பெருமைக்காக நான் கூற வில்லை. அதற்கு காரணம் திருநெல்வேலி மண்ணில் பிறந்த எனக்கு, அவர் திருநெல்வேலி மக்களுக்கு ஆற்றிய தொண்டுகளை எனது பெற்றோர் கற்று தந்தது தான். டி.வி.ஆர் ஐயாவுக்கு எனது மனதில் நீங்கா இடம் எப்போதும் உண்டு.


selvam
ஜூலை 21, 2024 12:44

திருநெல்வேலி மக்களின் பிரச்னைக்கு உடனடி தீர்வு கிடைக்க நேரம் காலம் பார்க்காமல் உழைத்த ஐயா டி.வி.ஆர்., நினைவு தினம் அன்று அவரை நினைப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். டி.வி.ஆர் ஐயாவுக்கு திருநெல்வேலி மக்கள் மனதில் நீங்கா இடம் உண்டு. அதேநேரத்தில் அவரது வழியில் கடமை, கண்ணியம் தவறாமல் அதே பாதையில் தினமலர் நாளிதழை வழிநடத்தும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


N Sasikumar Yadhav
ஜூலை 21, 2024 10:10

இந்த உலகம் இருக்கும்வரை TVR புகழ் நிலைத்திருக்கும் வணங்குகிறேன்


Velan
ஜூலை 21, 2024 09:34

வாழ்க. அவர் புகழ்


குமரி குருவி
ஜூலை 21, 2024 08:58

கன்னியாகுமரி மாவட்டம் தமிழ் நாட்டோடு இணைய வழி வகுத்தவர் ... வணங்குகிறோம்


Palanisamy T
ஜூலை 21, 2024 21:49

ஒரு எழுத்தாளன் எப்படியிருக்கவேண்டும் எப்படி இயங்கவேண்டுமென்பத்திற்கு இவர் ஒரு நல்ல உதாரணமாக திகழ்ந்து விட்டார். எந்த ஒரு அரசியல்வாதியோடும் ஒப்பிடமுடியாத அளவிற்கு இவர் தன் பணிகளை செய்துள்ளார். இவருக்குதான் நினைவிடங்கள் அமைக்கவேண்டும். மரியாதை செய்யவேண்டும். நாளை மற்றவர்களும் இவரை பின் பற்றுவார்கள் போற்றவும் செய்வார்கள்.


Palanisamy T
ஜூலை 22, 2024 07:02

குமாரி மாவட்டத்தை தமிழகத்த்தோடு இணைய வழி வகுத்தவரென்பதை அறியும் போது அந்த மாவட்டத்திற்காக போராடிய மார்ஷல் வக்கீல் நேசமணி மற்றும் சென்னையை தமிழகத்த்தோடு இணைக்கப் போராடிய சிலம்புச் செல்வர் மாபோசி அவர்களையும் நினைத்துப் பார்க்காமலிருக்க முடிய வில்லை. தமிழுக்கு அரியசேவைச் செய்த இவர்களை இன்றைய ஆட்சியாளர்கள் இன்னும் கொஞ்சமாவது நினைத்துப் பார்க்கின்றார்களா? யார் யாருக்கோ தொட்டத்திற்க்கெல்லாம் மக்களிடம் அடிக்கடி நினைவுப் படுத்துகின்றார்களே


ஹ.கணேஷ் நாகல் நகர்/திண்டுக்கல் மாவட்டம்
ஜூலை 21, 2024 08:22

பெருமதிப்புக்குரிய ஐயா TVR ன் புகழ் ஓங்குக !.....


மேலும் செய்திகள்