| ADDED : மே 16, 2024 01:29 AM
நாகர்கோவில்: கள்ளக்காதலியை ஓட ஓட விரட்டி குத்திவிட்டு தன் கழுத்தையும் அறுத்துக் கொண்ட இளைஞர் மீது நான்கு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.நாகர்கோவில் அருகே பீச் ரோடு கலைநகரைச் சேர்ந்தவர் சிவரஞ்சனி, 27. கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்தபடி அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார்.இன்ஸ்டாகிராமில் கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் அமராவதிவிளையைச் சேர்ந்த ஆண்டோபினோ, 33, என்பருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில் சிவரஞ்சனிக்கும், அவரது கணவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு சேர்ந்து வாழ தொடங்கினர். இதனால் ஆன்டோபினோவுடன் உள்ள தொடர்பை சிவரஞ்சனி துண்டித்தார். ஆனால் ஆண்டோபினோ தன்னுடன் வரும்படி அழைத்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சிவரஞ்சனியை அவர் பணிபுரியும் நிறுவனத்தில் ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தினார். பொதுமக்கள் கூடியதும் அங்கிருந்து தப்பிய ஆன்டோபினோ இருளப்பபுரத்தில் தன் கழுத்தை அறுத்துக் கிடந்தார். சிவரஞ்சனி தனியார் மருத்துவமனையிலும், ஆன்டோபினோ ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆன்டோபினோ மீது நான்கு பிரிவுகளில் கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.