உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழனிசாமி மீது அண்ணாமலை விமர்சனம் அமைதி காத்த மா.செ.,க்கள் மீது அதிருப்தி

பழனிசாமி மீது அண்ணாமலை விமர்சனம் அமைதி காத்த மா.செ.,க்கள் மீது அதிருப்தி

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு எதிராக, போராட்டங்கள் நடத்தாமல், பெரும்பாலான அ.தி.மு.க., மாவட்டச்செயலர்கள் மவுனம் காத்தது, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமிக்கு, கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.சென்னையில் கடந்த 25ம் தேதி பா.ஜ., பொதுக்கூட்டம் நடந்தது. இதில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசும்போது, 'என்னை பற்றியும், கட்சி குறித்தும், பழனிசாமி சில கருத்துக்களை கூறியுள்ளார். அதற்கு நான் கருத்து சொல்ல வேண்டும்.தவழ்ந்து சென்று முதல்வர் பதவியை பிடித்தவர் பழனிசாமி. எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா நடத்திய கட்சியை, இன்று கிணற்று தவளைகள் வழி நடத்தி கொண்டிருக்கின்றன' என்று பேசியதுடன், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியை தற்குறி எனக் கூறி கடுமையாக வசைபாடினார். அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் சுமத்தினார்.இது, தமிழக அரசியல் வட்டாரத்தில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியது. தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் தமிழிசையும், 'தலைவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ, அதை கொடுக்க வேண்டும். வார்த்தைகள் கடுமையாக இருக்க வேண்டாம்' என்று அண்ணாமலைக்கு அறிவுரை சொல்வது போன்று கருத்துச் சொன்னார். ஆனால், அ.தி.மு.க., தலைவர்கள் அதிகம் எதிர்வினையாற்றவில்லை. முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, உதயகுமார், செல்லுார் ராஜு, கடம்பூர் ராஜு, ஜெயகுமார் உள்ளிட்டோர் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்தனர்.மதுரை, சிவகங்கை உட்பட சில மாவட்டங்களில், அண்ணாமலை உருவ பொம்மையை, அ.தி.மு.க.,வினர் எரித்தனர். ஆனால், பெரும்பாலான மாவட்டங்களில், அண்ணாமலைக்கு எவ்வித எதிர்ப்பும் காட்டப்படவில்லை.அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் இருந்து, பல மாவட்ட செயலர்களுக்கு, தகவல் தெரிவிக்கப்பட்ட பின், சிலர் பெயரளவிற்கு எதிர்ப்பு போராட்டத்தை பதிவு செய்துள்ளனர். மூத்த தலைவர்கள் பலரும், இப்படியொரு சம்பவமே நடக்காதது போல அமைதியாக இருந்து விட்டனர். இது, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 'இதே நேரம் ஜெயலலிதா குறித்து பேசி இருந்தால், கட்சி நிர்வாகிகள் இப்படி அமைதியாக காப்பார்களா; மாவட்டச்செயலர்கள் ஒவ்வொருவரும் மீதும், ஏராளமான புகார்கள் வந்தும், அவர்கள் பதவியில் தொடர அனுமதித்தேன். ஆனால், அவர்கள் என்னைப் பற்றி தவறாக விமர்சித்த, அண்ணாமலைக்கு எதிராக போராட தயங்குகின்றனரே' என, தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆதங்கப்பட்டிருக்கிறார். அ.தி.மு.க., மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:அ.தி.மு.க.,வுக்கு என்றும் எதிரி கட்சி தி.மு.க.,தான். அதற்கு எதிராகத்தான் களமாட வேண்டும். அதை விடுத்து மற்ற கட்சிகளுடன் பகைமை பாராட்டுவது சரியல்ல என்பது, கட்சியின் மூத்த தலைவர்கள் எண்ணம். தி.மு.க.,வை விடுத்து, கட்சி தலைமை பா.ஜ., உடன் மோதுவதை, பெரும்பாலானோர் ரசிக்கவில்லை. இதன் காரணமாக, அண்ணாமலை கடுமையாக பழனிசாமியை விமர்சித்தபோதும், அமைதியாக இருந்து விட்டனர். இது, பொதுச்செயலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தவிரவும் தற்போதைய நிலையில், மூத்த தலைவர்கள் இடையே சுமூகமான உறவு இல்லை. இதுவும் அண்ணாமலைக்கு எதிராக பலரும் கொந்தளிக்காததற்கான காரனங்களில் ஒன்று.இவ்வாறு, அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை