| ADDED : ஏப் 30, 2024 11:44 PM
சென்னை:'அமெரிக்க தொழில் துறையில் மிகப்பெரிய நிறுவனமான, 'ராக்வெல் ஆட்டோமேஷன்' அதன் உற்பத்தி பிரிவை சென்னையில் புதிய வசதியுடன் விரிவுப்படுத்த உள்ளது' என, தமிழக தொழில்துறை அமைச்சர் ராஜா தெரிவித்துள்ளார்.அவர் தனது சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:தமிழகத்திற்கு மற்றொரு மிகப்பெரிய வெற்றி. அமெரிக்க தொழில்துறையில் மிகப்பெரிய 'ராக்வெல் ஆட்டோமேஷன்' நிறுவனம், அதன் உற்பத்தி பிரிவை சென்னையில் புதிய வசதியுடன் விரிவுப்படுத்த உள்ளது.இது தமிழகத்தின் நிலையை, வளர்ந்து வரும் உலகளாவிய மேம்பட்ட உற்பத்தி மையமாகவும், இந்தியாவின் மேம்பட்ட உற்பத்தி தலைநகராகவும், மேலும் உறுதிப்படுத்துகிறது.இது வரும் ஆண்டுகளில் மேம்பட்ட உற்பத்தி துறையில், நவீன தொழில்நுட்பத்தில் தமிழகம் காணப்போகும் புதிய முதலீடுகளின் தொடக்கம். ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனத்தின் விரிவாக்கம் குறித்து, கடந்த ஜனவரி மாதம் டாவோஸில், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பிளேக் மோரெட்டை சந்தித்தபோது விவாதிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தமிழகம் தொடர்ந்து குறிப்பிடத்தக்க உலகளாவிய முதலீடுகளை ஈர்த்து, வலுவான உற்பத்தி திறனை வெளிப்படுத்துகிறது. அடுத்த ஆண்டின் முதல் பாதியில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படும், இந்த அதிநவீன தொழிற்சாலை, நம் இளைஞர்களுக்கு உயர்தர வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான, நம் உறுதிப்பாட்டை முன்னெடுத்து செல்லும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.