| ADDED : மே 10, 2024 04:38 AM
சென்னை : நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவின் காவலாளி ரகுவின் மகள் சுரக் ஷா, 5. பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர் வீட்டைச் சேர்ந்த புகழேந்தி என்பவரின் இரண்டு நாய்கள், சிறுமியை கடுமையாக கடித்துக் குதறின. இதில், பலத்த காயமடைந்த சிறுமி, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.சிறுமியின் கை, கால், உடல் பகுதி முழுதும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தலைமுடியோடு சேர்ந்து, சிறுமியின் தலையின் மேற்பகுதி இரண்டாக பிளந்தது. இதனால், 'பிளாஸ்டிக் சர்ஜரி' என்ற ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. இதற்காக சிறுமிக்கு, பல்வேறு விதமான பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்தன.இந்நிலையில், அப்போலோ மருத்துவமனையின் சிறப்பு மருத்துவக் குழுவினர், சிறுமிக்கு ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சையை நேற்று மேற்கொண்டனர்.அறுவை சிகிச்சைக்குப் பின் சிறுமி நலமுடன் இருப்பதாகவும், அடுத்த வாரம் வீடு திரும்புவார் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். அறுவை சிகிச்சைக்கான மருத்துவ செலவை மாநகராட்சி ஏற்றுள்ளது.