| ADDED : ஜூன் 17, 2024 12:10 AM
கோவை, வாலாங்குளம் சிறுவர் பூங்கா.நான்கு வயது பேரனுடன் வந்திருந்தார் ஹைதர் அலி. மாலைநேர பொடிநடை வேண்டி தனியாக வந்திருந்தார் சண்முகநாதன். ஹைதர் அலியும் சண்முகநாதனும் பத்து வருட நண்பர்கள். இருவருமே அவரவர் பணியிலிருந்து ஓய்வு பெற்று ஓய்வூதியம் பெறுகிறார்கள்.பேரனுக்கு கோன் ஐஸ் வாங்கிக் கொடுத்தார் ஹைதர் அலி.“வணக்கம் ஹைதர் அலிபாய்!” “வணக்கம் சண்முகநாதன் சார்!”“குட்டிப்பையன் உங்க பேரனா?”“ஆமா... மகன்வழி பேரன்!”“இவனின் பெயரென்ன?”“இவனுக்கு நுாறு பெயர்கள் உள்ளன. கடிப்பய்யன், உச்சா பாய், விரல் சூப்பி, மியாவ் குட்டி, மாஷா தம்பி, சின்ன டியான்டியான்...”“எல்லாம் விடுங்க. இவன் பிறப்பு சான்றிதழில் உள்ள பெயரென்ன?”“அப்துல் சுபஹான்!”“நம் அன்புக்குரியவர்களை நுாறு பெயர்களில் கொஞ்சி மகிழ்கிறோம். பெரும்பாலும் அதிகாரப்பூர்வ பெயர்கள் தவிர மற்ற பெயர்கள் காரணப்பெயர்களே!”“கடவுள் விஷயத்தில் பல படிகள் மேலே...”“உங்க கடவுளின் பெயரான அல்லாஹ்வுக்கு வேறு பெயர்கள் உள்ளனவா?”சிரித்தார் ஹைதர் அலி. “சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். அல்லாஹ்வுக்கு மூவாயிரம் பெயர்கள் உண்டு. ஆயிரம் பெயர்கள் வானவர்களுக்கு மட்டுமே தெரியும். ஆயிரம் பெயர்கள் இறைத்துாதர்களுக்கு மட்டுமே தெரியும். டோராவில் 300 பெயர்கள். ஜபரில் 300 பெயர்கள். புதிய எற்பாடில் 300 பெயர்கள் உள்ளன. இறைவனின் 99 திருப்பெயர்கள் திருக்குர்ஆனில் சொல்லப்படுகின்றன!”''மற்ற மத கடவுள்களுக்கு?”“யூத மத கடவுளின் பெயர் எல் ஷடாய். மேலும் பல பெயர்களிலும் யூத கடவுள் அழைக்கப்படுகிறார்!”“புத்த மதத்தில்?”“கவுதம புத்தருக்கு முன் 28 புத்தர்கள் இருந்திருக்கின்றனர். இயேசுநாதருக்கு 101 பெயர்கள் உண்டு!”“மனப்பாடமாக சொல்கிறீர்களே?”“ஓய்வு நேரத்தில் ஆன்மிகம் சார்ந்த மத விழுமியங்களை, கோட்பாடுகளை ஆராய்ந்து வருகிறேன். மதங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமைகள்என்னென்ன, வேற்றுமைகள் என்னென்ன என பகுத்துப் பார்க்கிறேன்!”“இந்து மதக் கடவுள்களில் ஒருவராகிய சிவனுக்கு 108 பெயர்கள் உள்ளன!''''உலகில் உள்ள அனைத்து மதக் கடவுளருக்கும், ஏராளமான பேர்கள் உண்டோ?''''இருக்கு!''“உணர்வுப்பூர்வமாக பேசாமல் அறிவுப்பூர்வமாக பேசுவோம். கடவுள்களுக்கு இத்தனை பெயர்கள் இருப்பது சாத்தியமா?”“பவுதிக எல்லைகளைத் தாண்டிய அசாதாரணன் கடவுளுக்கு, எந்தமொழியும் இல்லை; இறைவன் ஒரு பெயரிலி. ரோஜாவை எந்த பெயரிட்டு அழைத்தாலும் ரோஜா நறுமணம் தந்தே தீரும் என்றார் ஷேக்ஸ்பியர்... இறைவனை எந்த பெயரிட்டு அழைத்தாலும் பிரபஞ்ச உயிர்களின் ரட்சகன் பணியை அவன் தொடர்ந்து செய்வான்! இறைவனுக்கு நான் ஒரு பெயர் வைக்கிறேன். பெயரிலி...”இறைவன் கண்சிமிட்டினான்... “அட... இந்த பெயரும் நல்லாத்தான் இருக்கு!”ஆர்னிகா நாசர்