பங்காரு அடிகளார் பிறந்த நாள் விழா; ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் துவக்கம்
மேல்மருவத்துார் : ஆதிபராசக்தி சித்தர் பீட பங்காரு அடிகளார் பிறந்த நாள் விழா நேற்று துவங்கி, நாளை வரை நடக்கிறது.மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், பங்காரு அடிகளாரின் 85வது பிறந்த நாளையொட்டி, நேற்று அதிகாலை 3:00 மணிக்கு மங்கள இசையுடன், ஆதிபராசக்தி அம்மன் குருபீடத்தில் உள்ள பங்காரு அடிகளார் திருவுருவ சிலைக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.அதன்பின் வெள்ளி ரதத்தில், பங்காரு அடிகளார் சிலையை வைத்து, சித்தர் பீடத்தில் செவ்வாடை பக்தர்கள் வலம் வந்தனர். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளாருக்கு சேலம், நாமக்கல் மாவட்ட ஆன்மிக இயக்க நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.குரு பீடத்தில், பங்காரு அடிகளார் திருப்பாதுகைக்கு, செவ்வாடை பக்தர்கள் பூஜை செய்தனர்.தமிழகம் மட்டுமின்றி, கர்நாடாகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து, ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு கொண்டு வரப்பட்ட ஆன்மிக ஜோதியை, ஆன்மிக இயக்க துணைத் தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். கலச விளக்கு வேள்வி பூஜையை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர் ஸ்ரீதேவி துவக்கி வைத்தார்.இதைத்தொடர்ந்து, இன்று காலை 9:00 மணிக்கு, பங்காரு அடிகளார் தங்கரத தேர் விழா நடக்கிறது. நாளை 3ம் தேதி, பங்காரு அடிகளார் பிறந்தநாளையொட்டி, நலத்திட்டங்கள், விழா மலர் வெளியிடும் நிகழ்ச்சி நடக்கிறது. மலேஷிய துாதரகத்தின் தென்னிந்திய பிரதிநிதி சரவணகுமார் பங்கேற்கிறார். விழா ஏற்பாடுகளை சேலம், நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் செவ்வாடை பக்தர்கள் செய்து வருகின்றனர்.