சென்னை:கோடை வெப்பத்தை தணிக்க, இரவு நேரத்தில் கடற்கரைக்கு செல்லும் மக்களை, போலீசார் துரத்தக் கூடாது எனக்கோரிய வழக்கில், மாநகர போலீஸ் ஆணையர் மற்றும் டி.ஜி.பி., பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.சென்னை திருமங்கலத்தை சேர்ந்த ஜலீல் என்பவர் தாக்கல் செய்த மனு:கோடை வெப்பம் அதிகரிப்பால், வீடுகளுக்குள் மக்கள் முடங்குவதால், அவர்களின் மனநிலையில் பாதிப்பு ஏற்படுகிறது. நகர்ப்புறமயத்தால், நகரங்களில் தொகுப்பு வீடுகள், அடுக்குமாடி வீடுகள் பெருகி விட்டன. ஏழை எளிய மக்களுக்கு, வீடுகளில் குளிர்சாதன வசதியில்லை. அதனால், கடற்கரையும், பூங்காங்களும் தான், அவர்களுக்கு நிவாரணம்.கடந்த 10ம் தேதி, என் குடும்பத்தினருடன் திருவான்மியூர் கடற்கரைக்கு சென்றேன். இரவு, 9:30 மணியளவில் போலீஸ் அதிகாரி ஒருவர் வந்து, கடற்கரையை விட்டு செல்லுமாறு கூறினார். எங்களை மட்டுமல்ல, கோடை வெப்பத்தை தணிக்க வந்த அனைவரையும் போலீசார் விரட்டினர். தயக்கம் காட்டிய மக்களுக்கு எதிராக, போலீசாரின் நடவடிக்கை கடுமையாக இருந்தது. வெப்பத்தை தணிக்க, போக்குவரத்து சிக்னல்களில் மேற்கூரை அமைக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, கடற்கரை, பூங்காங்களில், இரவு நேரங்களிலும் மக்களை அனுமதிக்கும்படி, டி.ஜி.பி., - மாநகர போலீஸ் ஆணையருக்கு மனுக்கள் அனுப்பினேன். மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். கோடை வெப்பத்தை தணிக்க, கடற்கரை, பூங்காக்களுக்கு வருபவர்களை துரத்தக்கூடாது என, போலீசாருக்கு அறிவுறுத்த, ஆணையருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்க, மாநகர போலீஸ் ஆணையர் மற்றும் டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டு, விசாரணையை, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.