சென்னை:நாடு முழுதும், நுாற்றுக்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் மற்றும் விமான நிலையங்களுக்கு, 'இ - மெயில்' வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.சென்னையில் பிப்., மாதம், ஒரே நேரத்தில், 'இ - மெயில்' வாயிலாக மர்ம நபர்கள், 13 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதனால், பள்ளிகள் முன் பெற்றோர் குவிந்தனர். அதன்பின், மார்ச்சில், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு, அதே பாணியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. விசாரணையில், சுவிட்சர்லாந்தில் செயல்படும், 'புரோட்டான்' என்ற நிறுவனத்தின் இ - மெயில் சேவையை பயன்படுத்தி மிரட்டல் விடுக்கப்பட்டது தெரியவந்தது. பயனர் முகவரியான, ஐ.பி., அட்ரஸ் உள்ளிட்ட விபரங்களை கேட்டு, அந்நிறுவனத்திற்கு சென்னை மாநகர போலீசார் கடிதம் எழுதினர்; அந்த நிறுவனம் ஒத்துழைப்பு தரவில்லை. இதனால், மத்திய அரசு வாயிலாக, நம் நாட்டில் அந்த நிறுவனத்தின் சேவையை முடக்கும் பணியில் போலீஸ் அதிகாரிகள் ஈடுபட்டனர். அதன்பின், கணினி மற்றும் ஐ.பி., அட்ரஸ் உள்ளட்ட விபரங்களை, அந்த நிறுவனம் வழங்கியது. ஆனால், மிரட்டல் ஆசாமியை போலீசாரால் நெருங்க முடியவில்லை.இந்நிலையில், அதே பாணியில், தமிழகம் உட்பட நாடு முழுதும், நுாற்றுக்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் மற்றும் விமான நிலையங்களுக்கு, 'இ - மெயில்' வாயிலாக, வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசனட்டியை சேர்ந்தவர் நவீன்குமார், 38, டாக்டரான இவர், தி.மு.க., மேற்கு மாவட்ட மருத்துவ அணி தலைவராகவும் உள்ளார். ஓசூர் மாருதி நகர் பகுதியில் குழந்தைகள் மருத்துவமனை நடத்தி வருகிறார். இவரின் மனைவி ஸ்ரீலட்சுமி, ஓசூர் மாநகராட்சி, 15வது வார்டு கவுன்சிலராக உள்ளார். அவரும் அதே மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். நேற்று காலை, 10:18 மணிக்கு, 'இ - மெயில்' வாயிலாக மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. சிப்காட் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார், மருத்துவமனையில் சோதனை செய்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த, நான்கு குழந்தைகள், வேறு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.ஏட்டு நிர்மல்குமார் தலைமையில், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்ப நாய் ரோசி மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன், மருத்துவமனையின் தரை தளம், முதல் மற்றும் 2ம் தளத்தில் சோதனை செய்தனர். வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிந்தது. டில்லி, மும்பை, கோவா, நாக்பூர், கோல்கட்டா மற்றும் ஜெய்ப்பூர் உட்பட 30க்கும் மேற்பட்ட விமான நிலையங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும், இ - மெயில் வாயிலாக நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு, இதற்கு முன் நான்கு முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதுகுறித்து, அந்தந்த மாநில, சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.