பக்கெட் - பணம் வழங்கி உறுப்பினர் சேர்க்கை * திருப்பூரில் காங்கிரசார் கூத்து
திருப்பூர்:திருப்பூரில் வீதி வீதியாகச் சென்று, வாலிபர்களை கூவிக் கூவி அழைத்து உறுப்பினர் சேர்க்கும் செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. பணம், பரிசு பொருள் கொடுத்து நடக்கும் இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.தமிழக இளைஞர் காங்., அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக இளைஞர் காங்., அணியில் அதிக உறுப்பினர் சேர்ப்பவருக்கு பதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாநிலம் முழுவதும், மாநில தலைவர் பதவிக்கு போட்டியிடும் சூர்ய பிரகாஷ், தினேஷ், அருண் பாஸ்கர் உள்ளிட்டோர் மாவட்ட வாரியாக தங்கள் ஆதரவாளர்களை முடுக்கி விட்டு, பல்வேறு வகையிலும் உறுப்பினர் சேர்க்கையை மேற்கொண்டுள்ளனர்.அவ்வகையில், மாநில தலைவராக சூர்ய பிரகாஷூக்கு ஆதரவு தெரிவிக்கும் திருப்பூரை சேர்ந்த ஷோஜன் மேத்யூ மற்றும் அருண் ஆகியோர் திருப்பூரில் உறுப்பினர் சேர்க்கையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அதற்காக திருப்பூர், நெருப்பெரிச்சல் பகுதியில் வாலிபர்களை சந்தித்து பேசிய ஆதரவாளர்கள், பொதுமக்களிடம் வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்டு இளைஞர் அணி உறுப்பினராக பதிவு செய்தனர். இதற்காக ஒரு ஆட்டோ மற்றும் காரில் ஏராளமான பிளாஸ்டிக் பக்கெட்டுகளை நிரப்பி வைத்துக் கொண்டு, உறுப்பினர் சேர்க்கைக்கான ஓ.டி.பி., வந்து பதிவானவுடன், பணமும் பக்கெட்டும் கொடுத்தனர். 'இதுபோல் தங்களுக்குத் தெரிந்த வாக்காளர் அடையாள அட்டை உள்ள நபர்கள் இருந்தால் அழைத்து வாருங்கள்,' என்றும் தெரிவித்தனர்.அந்தப் பகுதியில் வந்த சில இளைஞர்கள், பணம் கொடுத்து கட்சிக்கு ஆள் சேர்ப்பதை தங்களுடைய மொபைல் போன் வாயிலாக வீடியோவாக பதிவு செய்தனர். அதில், ஒருவரான திருப்பூரைச் சேர்ந்த த.வெ.க., பிரமுகர் மகேஷ் என்பவர், 'ஆன்லைன்' வாயிலாக திருமுருகன்பூண்டி போலீசில் புகார் அளித்தார். 'பணம், பரிசு பொருள் அளித்து காங்.,குக்கு உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது; இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.