பட்ஜெட் பேட்டி
தொழில் வளர்ச்சி மேலும் பெருகும்எஸ்.மூர்த்தி, ஓசூர் சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் சங்கமான ஹோஸ்டியா தலைவர்:பட்ஜெட்டில், ஓசூரில், 400 கோடி ரூபாய் மதிப்பில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு, 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், புதிதாக தொழில் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும். தமிழகத்தில் ஒன்பது இடங்களில், 398 ஏக்கரில், 366 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும். ஓசூரை ஒட்டி, அறிவுசார் பெருவழித்தடம் அமைக்கப்படும். 225 கோடி ரூபாய் ஒதுக்கி, 1 லட்சம் பெண்களை தொழில் முனைவோர்களாக உயர்த்தும் திட்டம் போன்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. இதனால் ஓசூர் பகுதியில் தொழில் வளர்ச்சி மேலும் பெருகும்.கரூர் ஜவுளி உற்பத்தியாளர், ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் பி.கோபாலகிருஷ்ணன்:தமிழக அரசின் பட்ஜெட் சிறப்பானது. வளர்ச்சியை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. தொழில் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கல்வி, போக்குவரத்து, வீட்டு வசதி உள்ளிட்ட பல்வேறு துறைகளும் வளர்ச்சியடையும் அடையும் வகையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கரூர் மாவட்டத்தில் சிப்காட் அமைக்க, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால், வேலைவாய்ப்புகள் ஏற்படும். ஜவுளி துறையில் மூன்று ஆண்டுகள் பழமை வாய்ந்த, விசைத்தறிகளை மாற்றும் வகையில் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வரவேற்கத்தக்கது.ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பான பேட்டியா பொதுச்செயலர் ரவிச்சந்திரன்: கல்வி, குழந்தைகளின் படிப்பு மற்றும் வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கி உள்ளனர். மாநில கட்டமைப்பை மேம்படுத்த, பெரு நகரங்களில் 'அவுட்டர் ரிங்ரோடு' விரிவாக்கத்துக்கு அறிவிப்பு செய்துள்ளனர். கப்பல் கட்டும் அமைப்பு, செமி கன்டக்டர் உற்பத்தி ஊக்குவிப்பை அறிவித்துள்ளனர். பல துணை நகரங்களை ஏற்படுத்தவும், ஜவுளி துறை, கைத்தறி ஊக்குவிப்புக்கும், 3,000 விசைத்தறிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்துள்ளதை வரவேற்கலாம்.வி.டி.கருணாநிதி, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு தலைமை ஆலோசகர்:பட்ஜெட்டில், 5 லட்சம் விசைத்தறியாளர்கள் பயன்பெறும் வகையில், 50 கோடி ரூபாயில் விசைத்தறி நவீனப்படுத்துதல் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் தொய்வு நிலையில் இருக்கும் விசைத்தறி தொழில் வளர்ச்சி அடையும். விலையில்லா வேட்டி சேலைக்கு, 673 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி அதிகரிக்கும். கைத்தறிக்கு, 1,980 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விசைத்தறி மற்றும் ஜவுளித்துறை தொழிலுக்கு வளர்ச்சி சார்ந்த பட்ஜெட்டாக உள்ளது.'அரசு ஊழியருக்கு பெரும் ஏமாற்றம்'மா.நித்தியானந்தம், தமிழக பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர்: தி.மு.க., அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது. மொத்தத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பணப்பலன்களை வழங்க தயாராக இல்லை என தெரிகிறது. அடுத்த நிதியாண்டில் ஈட்டிய விடுப்பு சரண் செய்வது அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு, இப்போது ஏன் வெளியிட்டார்கள் என தெரியவில்லை. ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு, இந்த பட்ஜெட் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.