| ADDED : மே 06, 2024 06:16 AM
மதுரை : ''சாமானிய மக்களுக்காக தனிச்சட்டங்களை மத்திய அரசு உருவாக்க வேண்டும். இல்லையெனில் டில்லியில் போராட்டம் நடத்துவோம்'' என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தேசிய முதன்மை துணைத்தலைவர் விக்கிரமராஜா பேசினார்.மதுரை வலையங்குளத்தில் வணிகர் தினத்தையொட்டி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடந்தது. மாவட்ட செயலாளர் அழகேசன் வரவேற்றார். மண்டல தலைவர் செல்லமுத்து கொடியேற்றினார்.இதில் தேசிய முதன்மை துணைத் தலைவர் விக்கிரமராஜா பேசியதாவது: சாமானிய வணிகர்கள் வாழ்வாதாரங்களை காவு கொடுத்த நிலையில் உள்ளனர். கார்ப்பரேட் கம்பெனிகளும், ஆன்லைன் வர்த்தகமும் நம்மை நசுக்கி கொண்டிருக்கின்றன. சாமானிய வணிகர்கள் வியாபாரத்தை எப்படி நடத்தப் போகிறோம் என்ற நிலையில், அரசு அதிகாரிகள் மேலும் அவர்களை துன்பப்படுத்துகின்றனர்.அதிகாரிகளின் நெருக்கடியால் வணிகத்தை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். வணிகவரித்துறை அதிகாரிகள் எழுத்துப் பிழைக்காக ரூ. பத்தாயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம் கேட்கின்றனர். இதற்கு விளக்கம் கேட்டால் எங்களுக்கு அரசு 'டார்கெட்' வைத்துள்ளது என்கின்றனர். வணிகவரி அமைச்சர் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.உள்ளாட்சித் துறையில் மாநகராட்சி கட்டடங்களில் வாடகை விகிதம் உயர்ந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் ஊட்டியில் இந்தப் பிரச்னை இருந்து கொண்டிருக்கிறது. இதுபோன்ற இடர்பாடுகளை அமைச்சர் நீக்க வேண்டும். வணிகத்தை பாதுகாப்பது எங்களுக்கு பெரிய பிரச்னையாக உள்ளது. ஐந்து கட்ட வரியை மத்திய அரசுக்கு செலுத்த வேண்டாம். ஒரே முறையில் வரியை பெற்றுக் கொள்ளுங்கள் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.இந்தியாவில் டோல் வரி இருக்காது என மத்திய அரசு அறிவித்தது. ஆனால் டோல் வரியும் உள்ளது. ஜி.எஸ்.டி., யும் உள்ளது. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக உள்ள சட்டங்களை மாற்றி சாதாரண மனிதர்களுக்காக தனிச் சட்டங்களை மத்திய அரசு அமைத்துத் தரவேண்டும். இல்லையெனில் டில்லியில் ஆர்ப்பாட்டம், போராட்டம் தொடங்குவோம் என்றார்.மாநாட்டில் அமைச்சர்கள் மூர்த்தி, அனிதா ராதாகிருஷ்ணன், கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டனர். மாவட்ட துணைத் தலைவர் வெங்கடேசன், வழக்கறிஞர் எம்.ஆர்.கிருஷ்ணகுமார், பாண்டி, ஆடிட்டர் கிருஷ்ணசாமி, ராஜாராம்நாத் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.