சென்னை:'அம்மா' மருந்தகங்களை மூடிவிட்டு, 'முதல்வர் மருந்தகம்' என, ஸ்டிக்கர் ஒட்ட, தி.மு.க., அரசு முயற்சிப்பதாக, அ.தி.மு.க.,வும், அ.ம.மு.க.,வும் கண்டனம் தெரிவித்துள்ளன.* அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்: அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு மூடுவிழா காண்கின்றனர். 'அம்மா சிமென்ட்'டை மூடிவிட்டு, 'வலிமை சிமென்ட்' என்று பெயர் மாற்றினர். தற்போது அதுவும் கிடைக்கவில்லை. அம்மா உணவகத்தை படிப்படியாக மூடி வருகின்றனர்.அம்மா மருந்தகத்தை மூடிவிட்டு, முதல்வர் மருந்தகம் திறக்கப்படும் என்கின்றனர். அ.தி.மு.க., அரசின் திட்டங்களை பெயர் மாற்றி, லேபிள் ஒட்டுவதை தவிர, வேறு புதிய திட்டம் எதையும், தி.மு.க., அரசு கொண்டு வரவில்லை.அத்திக்கடவு - அவினாசி திட்டம், பழனிசாமி அறிவித்தார். அதை தி.மு.க., கொண்டு வந்ததாகக் கூறி, தற்போது அதை திறக்கின்றனர். சேலம் மாவட்டம், தலைவாசலில் கால்நடை பூங்காவை, பழனிசாமி அமைத்தார். அதை காழ்ப்புணர்ச்சியால் திறக்காமல் உள்ளனர்.* அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்: ஏழை மக்களுக்காக துவக்கப்பட்ட, 'அம்மா மருந்தகம்' தொடர்ந்து செயல்படுவதை, தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். கடந்த 2014ம் ஆண்டு ஜெயலலிதா துவக்கிய, அம்மா மருந்தகங்களை மூடிவிட்டு, முதல்வர் மருந்தகம் என்ற பெயரில், ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள முயற்சிப்பது கண்டனத்துக்குரியது.ஜெயலலிதா கொண்டு வந்த தாலிக்கு தங்கம், தொட்டில் குழந்தை திட்டம், மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், அம்மா உணவகம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் வரிசையில், அம்மா மருந்தகங்களையும் மூட முயற்சிப்பது, தி.மு.க., அரசின் அப்பட்டமான அரசியல் காழ்ப்புணர்ச்சியையே வெளிப்படுத்துகிறது. அம்மா மருந்தகங்களை மேம்படுத்துவதோடு, அதன் வழியே ஏழை மக்களுக்கு மலிவான விலையில், தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.