வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நான் சொல்லல, சார் நல்லா காமெடி பண்ணுவாருன்னு.
சென்னை:''மக்கள் நலனை டாக்டர்களாகிய நீங்கள் கவனியுங்கள். உங்களது நலனை அரசு கவனிக்கும்,'' என, முதல்வர் ஸ்டாலின் பேசினார்.மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட, 2,642 உதவி டாக்டர்களுக்கு, சென்னை திருவான்மியூரில் நடந்த நிகழ்ச்சியில், பணி நியமன ஆணைகளை, நேற்று முதல்வர் வழங்கினார். சேவை
பின், அவர் பேசியதாவது:இந்த அரசு மக்களை காக்கக்கூடிய அரசு, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பது தான் அரசின் உயர்ந்த லட்சியம். எத்தனை தடைகள், எப்படிப்பட்ட நெருக்கடிகள் வந்தாலும் எதிர்கொண்டு பணியை மேற்கொள்வோம்.அரசு பணிக்கு வரக்கூடிய டாக்டர்கள், ஏழை, எளிய கிராமப்புற நோயாளிகள், கர்ப்பிணியர், குழந்தைகள் உள்ளிட்டோரின் நோய்கள் மட்டுமல்ல, அவர்களின் மனநிலை, புறச்சூழலையும் புரிந்து கொள்ள வேண்டும். கிராமங்களில் இருந்தும், சிறிய நகரங்களில் இருந்தும் டாக்டர்கள் உருவானால்தான், அனைத்து தரப்பு மக்களுக்கும் நல்ல முறையில் சிகிச்சை கிடைக்கும். அதன்படி, சிறிய நகரங்களில் இருந்தும் டாக்டர்கள் உருவாகி உள்ளனர்.முதல்வர் என்பதால், நான் பணி ஆணை வழங்குகிறேன். ஆனால், நீங்கள் செய்யப் போவது சாதாரண பணியோ, வேலையோ அல்ல; மக்களின் உயிர் காக்கும் சேவை, சமுதாயத்திற்கான மிகப் பெரிய தொண்டு. இனி மக்கள் உங்களை நம்பி, தங்களின் உயிர் காக்கும் பொறுப்பை ஒப்படைக்க இருக்கின்றனர். நிச்சயம்
அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றுகிற அளவுக்கு, உங்கள் சேவை அமைய வேண்டும். மக்களின் நலனை நீங்கள் கவனியுங்கள்; உங்களது நலனை கவனிக்க, அரசு இருக்கிறது.உங்களுக்கு எது அவசியம் தேவையோ, அதையெல்லாம் நிச்சயம் நான் செய்வேன்.இவ்வாறு அவர் பேசினார்.
அரசு மருத்துவமனைகளுக்கு, 2,642 உதவி டாக்டர்கள் தேர்வு செய்ய, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், கடந்தாண்டு அறிக்கை வெளியிட்டது. அதில், 2024 ஜூலை 15க்கு முன், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்ற டாக்டர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என, தெரிவிக்கப்பட்டது.அதேநேரம், ஜூலை 15க்கு பின் பதிவு செய்த டாக்டர்களும் தேர்வு எழுதினர். ஆவண சரிபார்ப்பு பணியின்போது, 400 டாக்டர்களின் விண்ணப்பங்கள், ஜூலை 15க்கு பின் பதிவு செய்தது கண்டறியப்பட்டு நிராகரிக்கப்பட்டன.இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆறு டாக்டர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள், நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன் நேற்று, மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, 'குறிப்பிட்ட 'கட் ஆப்' தேதிக்குள், மருத்துவ கவுன்சிலில் டாக்டராக பதிவு பெற்றவர்கள் மட்டுமே பணி நியமனத்திற்கு தகுதியானவர்கள். உரிய விதிகளுக்கு உட்பட்டு தான் பணி நியமனம் நடக்கிறது' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
நான் சொல்லல, சார் நல்லா காமெடி பண்ணுவாருன்னு.