உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவைக்கு அவசரத் தேவை முழு ரிங் ரோடு!

கோவைக்கு அவசரத் தேவை முழு ரிங் ரோடு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவையின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றுவதைக் காட்டிலும், இப்போதுள்ள வளர்ச்சிக்கேற்ப முழுமையான ரிங் ரோடு அமைக்க வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது.சேலம்-கொச்சி (என்.எச்.544), கோவை-மைசூரு (என்.எச்.948), கோவை-ஊட்டி (என்.எச்.181), நாகப்பட்டினம்-கோவை (என்.எச்.83), கோவை-கரூர்-திருச்சி (என்.எச். 81) என ஐந்து தேசிய நெடுஞ்சாலைகள், கோவை நகரைக் கடக்கின்றன. கர்நாடகா மற்றும் கேரளம் ஆகிய இரு மாநிலங்களுக்குமான, முக்கிய வழித்தடங்களாகவும் இவை அமைந்துள்ளன.தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமாக வளர்ந்துள்ள கோவை நகருக்கு, இப்போது வரையிலும் முழுமையான ரிங் ரோடு இல்லை. அவினாசி ரோடு நீலம்பூரில் துவங்கி, சுங்கம் பகுதியில் திருச்சி ரோட்டைக் கடந்து, மதுக்கரை அருகே பாலக்காடு ரோட்டில் முடிவடையும் 27 கி.மீ., துாரமுள்ள 'எல் அண்ட் டி' பை பாஸ் ரோடு மட்டுமே, இந்த நகருக்கான ஒரே பை பாஸ் ரோடாகவுள்ளது.அதுவும் சேலம்-கொச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு மட்டுமேயான புறவழிச்சாலையாகவே இது அமைந்துள்ளது. மற்ற நான்கு தேசிய நெடுஞ்சாலைகளும், நகருக்குள் ஊடுருவிச் செல்கின்றன. தற்போது 32.43 கி.மீ., துாரத்துக்கு அமைக்கப்படும் மேற்கு புறவழிச்சாலை முழுமையாக முடிவடைந்தால், இரு தேசிய நெடுஞ்சாலைகளுக்கு பை பாஸ் கிடைக்கும்.புதிதாக அமைக்கப்பட்டு வரும் மேற்கு புறவழிச்சாலை, 'எல் அண்ட் டி' பை பாஸ் ஆகியவற்றுடன், கோவை நகருக்கு வெளியே வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை இணைக்கும் வகையில், கிழக்கு புறவழிச்சாலை திட்டமிடப்பட்டுள்ளது. அதுவும் அமைந்தால் மட்டுமே, முழுமையான ரிங் ரோடு உருவாகி, நகருக்குள் எந்த வாகனங்களும் வர வேண்டிய தேவையிருக்காது.என்.எச்.,544 மற்றும் என்.எச்.181 ஆகிய, தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில், 20.1 கி.மீ., துாரத்துக்கு கிழக்கு புறவழிச்சாலை திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டுமே தேசிய நெடுஞ்சாலைகள் என்பதால், இந்தப் பணியை தேசிய நெடுஞ்சாலை ஆணையமே செய்ய வேண்டியுள்ளது. இந்த மூன்று ரோடுகளையும் இணைத்தால், 80 கி.மீ., நீளமுள்ள முழுமையான ரிங் ரோடு உருவாகிவிடும்.கிழக்கு புறவழிச்சாலையை விரைவாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் அதே நேரத்தில், தற்போதுள்ள 'எல் அண்ட் டி' பை பாஸ் ரோட்டை, ஆறு வழிச்சாலையாக அகலப்படுத்த வேண்டியது மிகமிக அவசியம். இரு வழிச்சாலையாகவுள்ள இந்த ரோட்டில், ஆண்டுக்கு 120 பேர் விபத்துக்களில் உயிரிழக்கின்றனர். இதை விரிவாக்கம் செய்யும் பொறுப்பும், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கே உள்ளது.ஆனால் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, இந்த ஆணையம் எந்த வேலையையும் செய்யாமல் குறட்டை விட்டு துாங்கிக் கொண்டிருக்கிறது. இவற்றைத் தவிர்த்து, கோவை-கரூர் மற்றும் கோவை-சத்தி ஆகிய நகரங்களுக்கு இடையிலான பசுமை வழிச்சாலைகள் ஆகிய திட்டங்களும் பல ஆண்டுகளாக காகிதத்தில் மட்டும் இருக்கின்றன.பசுமை வழிச்சாலைகளையும் விட, எல் அண்ட் டி பை பாஸ் விரிவாக்கம் மற்றும் உத்தேச கிழக்கு புறவழிச்சாலை ஆகிய இரண்டு பணிகளையும் செய்ய வேண்டியது, மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் மிக முக்கியமான கடமையாகும். இன்னும் சொல்லப் போனால், விமான நிலைய விரிவாக்கத்தை விட, இவையிரண்டும் அவசரமாகச் செய்ய வேண்டிய பணிகளாகும். ஏனெனில், கோவை நகருக்குள் போக்குவரத்து நெரிசல், நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது; விபத்துகளும் அதிகமாகி வருகின்றன. எனவே, மத்திய, மாநில அரசுகளின் ஆளும்கட்சிகள், எதிர்க்கட்சிகள் ஆகியவை இணைந்தும், தொழில் அமைப்புகள் ஓரணியிலும் இவ்விரு திட்டங்களை வலியுறுத்த வேண்டும்; இதற்காக அனைத்துத் தரப்பும் சேர்ந்து, ஓர் அமைப்பை உருவாக்க வேண்டியதும் அவசர அவசியம்.கோவை நகரின் எதிர்கால வளர்ச்சிக்கான திட்டங்களை விட, இப்போதுள்ள வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்கே, இந்த திட்டங்களை அதி விரைவாக நிறைவேற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்.-நமது நிருபர்-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Venkataramanan Kannan
ஜூலை 04, 2024 20:34

Yes sir you are 100 percent right. The Ring road is very much needed. Government should look into this. Specially from pichanur to perianaiakanpalayam or upto mettupalayam entrence a six way by pass and LT by pass to be extended to six lane Road


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை