உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 52 சதவீதம் அதிகரிப்பு: ராமதாஸ் கவலை

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 52 சதவீதம் அதிகரிப்பு: ராமதாஸ் கவலை

சென்னை :பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: போக்சோ எனப்படும் பாலியல் குற்றங்களில் இருந்து, குழந்தைகளை பாதுகாப்பதற்கான சட்டத்தின்படி, 2024-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 6,975 ஆக அதிகரித்திருக்கிறது. கடந்த 2023-ம் ஆண்டு, இதே சட்டத்தின் கீழ் பதிவான 4,581 வழக்குகளுடன் ஒப்பிடும்போது, 2,394 வழக்குகள் கூடுதலாகி உள்ளன. அதாவது 52.30 சதவீதம் அதிகம்.தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. பாலியல் குற்றங்களை தடுப்பதற்கான சட்டங்கள் போதுமான அளவில் உள்ளன. அவற்றை முறையாக செயல்படுத்தாதது தான், பாலியல் குற்றங்கள் பெருகுவதற்கு முக்கிய காரணம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது, வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுப்பது மட்டுமே போதுமானதல்ல. குற்றங்களே நடக்காமல் தடுப்பது தான் சாதனை. குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளை திறம்பட நடத்தி, அவர்களுக்கு கடும் தண்டனையை பெற்றுத் தர வேண்டும்.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வருவதன் வாயிலாக, தமிழகம் பெண்களும், குழந்தைகளும் வாழ தகுதியற்ற மாநிலம் என்ற நிலை ஏற்பட்டு விடக்கூடாது. குற்றங்களை தடுப்பதன் வாயிலாக, தமிழகத்தில் பெண்களும், குழந்தைகளும் அச்சமின்றி நடமாடும் சூழலை, தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ