உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் நிறுவ டெண்டர் கோரியது மின்வாரியம்

பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் நிறுவ டெண்டர் கோரியது மின்வாரியம்

சென்னை: தமிழகத்தில், ஒரு மணி நேரத்திற்கு, 1,000 மெகா வாட் பசுமை மின்சாரத்தை சேமித்து, மீண்டும் பயன்படுத்தும், 'பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ்' கட்டமைப்பு பணியை செயல்படுத்தும் திட்டத்திற்கு ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, மின்வாரியம், 'டெண்டர்' கோரியுள்ளது.உலகம் முழுதும் சுற்றுச்சூழலை பாதிக்காத காற்றாலை, சூரியசக்தி உள்ளிட்ட பசுமை மின்சார பயன்பாடு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில், இந்த இருவகை மின்சாரமும் அதிகம் கிடைக்கும் சூழல் நிலவுகிறது. இதனால், பல நிறுவனங்களும் அந்த மின் நிலையங்களை அமைத்து வருகின்றன.தற்போது, பசுமை மின்சாரம் உற்பத்தியான உடனேயே பயன்படுத்தப்படுகிறது. வெளிநாடுகளில் இருப்பது போல, தமிழகத்தில் ஒரு மணி நேரத்திற்கு, 1,000 மெகாவாட் பசுமை மின்சாரத்தை சேமித்து வைத்து, பயன்படுத்தும் பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. துணைமின் நிலையங்களில் காலியாக உள்ள இடங்களில், இத்திட்ட பணிகளை செயல்படுத்தும் ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, மின் வாரியத்தின் பசுமை எரிசக்தி கழகம் நேற்று, 'டெண்டர்' கோரியுள்ளது. பி.ஓ.ஓ., திட்டத்தின் கீழ், அதாவது ஒப்பந்த நிறுவனம் தன் சொந்த செலவில், பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் கட்டமைப்பை அமைத்து, செயல்படுத்த வேண்டும். அந்நிறுவனத்தின் கட்டமைப்பில் மின்சாரத்தை மின்வாரியம் சேமித்து, மீண்டும் பயன்படுத்தும். இதற்கு, 1 யூனிட்டிற்கு கட்டணம் நிர்ணயித்து வழங்கப்படும். எனவே, குறைந்த கட்டணம் தெரிவிக்கும் நிறுவனத்திற்கு பேட்டரி ஸ்டோரேஜ் கட்டமைப்பு ஏற்படுத்த அனுமதி வழங்கப்படும். பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் கட்டமைப்பு ஏற்படுத்தும் நிறுவனங்களை ஊக்குவிக்க, மத்திய அரசு நிதி உதவி செய்கிறது. தமிழகத்தில், 1 மெகாவாட் கட்டமைப்புக்கான மொத்த செலவில், 40 சதவீதம் வரை நிதியுதவி செய்யப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ