உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இயக்குநர் ஷங்கர் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை

இயக்குநர் ஷங்கர் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை

சென்னை, : எந்திரன் பட விவகாரத்தில், இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.எந்திரன் படக்கதை விவகாரத்தில் காப்புரிமையை மீறியதாக, இயக்குநர் ஷங்கரின், 10.11 கோடி ரூபாய் மதிப்பிலான அசையாச் சொத்துகளை முடக்கி, கடந்த பிப்ரவரி, 17ல், அமலாக்கத்துறை உத்தரவு பிறப்பித்தது.இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு தடை கோரியும், சென்னை உயர் நீதிமன்றத்தில், இயக்குநர் ஷங்கர் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. இயக்குநர் ஷங்கர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ''எந்திரன் படத்தின் கதை விவகாரத்தில் காப்புரிமை சட்டத்தை, மனுதாரர் ஒருபோதும் மீறவில்லை. கதைக்கு சொந்தம் கொண்டாடி, ஆரூர் தமிழ்நாடன் என்பவர் தொடர்ந்த வழக்கில், உயர் நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், அமலாக்கத்துறை ஷங்கரின் சொத்துக்களை முடக்கியுள்ளது. ''எந்திரன் படத்தின் கதைக்காக மட்டுமின்றி, படத்தின் மற்ற பணிகளுக்காகவும் ஊதியம் பெற்றுள்ளார். ''அவ்வாறு இருக்கும்போது, அவருடைய சொத்துக்களை அமலாக்கத்துறை எப்படி முடக்க முடியும்,'' என்றார்.அதற்கு நீதிபதிகள், 'தனிநபர் ஒருவர் அளித்த புகார் அடிப்படையில் குற்றம் நடந்ததாகக் கூறி, அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்ய முடியுமா; அவசர கதியில் நடவடிக்கை எடுத்தது ஏன்?' என்று, கேள்வி எழுப்பினர்.அதற்கு அமலாக்கத்துறை தரப்பில் வழக்கறிஞர் என். சிபிவிஷ்ணு ஆஜராகி, ''தனிநபர் புகாரில் வழக்கு பதிவு செய்ய முடியும். அமலாக்கத்துறை நடவடிக்கையால், மனுதாரருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த வழக்கை சட்ட ரீதியாக, அவர் எதிர்கொள்ளலாம்,'' என்றார்.இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இயக்குநர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கி, அமலாக்கத்துறை பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப்., 21க்கு தள்ளிவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை