ஒவ்வொரு டாக்டருக்கும் மாதம் ரூ.20,000 இழப்பு ஓய்வூதிய திருத்த கட்டமைப்பால் தவிப்பு
சென்னை:ஓய்வுபெற்ற டாக்டர்களின் ஓய்வூதிய திருத்தத்தால், ஒவ்வொருவருக்கும் 20,000 ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக கூறி, டாக்டர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி, 15,000க்கும் மேற்பட்ட டாக்டர்கள் ஓய்வுபெற்று, அவரவர் பணிக்காலம், நிபுணத்துவம் அடிப்படையில், ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.இந்நிலையில், மக்கள் நல்வாழ்வு துறையில், ஓய்வூதிய கட்டமைப்பை திருத்தியமைக்கும் பணி துவங்கியுள்ளது. இதுகுறித்து அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த திருத்தத்தால், 2009க்கு முன் ஓய்வுபெற்ற டாக்டர்கள், தங்களது ஓய்வூதியத்தில் இருந்து, 20,000 முதல் 22,000 ரூபாய் வரை இழக்க நேரிடுவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து, சமூக சமத்துவ டாக்டர்கள் சங்க செயலர் ரவீந்திரநாத் கூறியதாவது:ஓய்வூதியத்தை திருத்தியமைத்தல் என்ற பெயரில், ஓய்வுபெற்ற டாக்டர்களின் ஓய்வூதியத்தை குறைக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. இதனால், ஒவ்வொரு டாக்டரின் ஓய்வூதியத்தில் மாதம், 20,000 ரூபாய் குறைகிறது. இதனால், 70 வயதிற்கு மேற்பட்ட, 850 டாக்டர்கள் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள் வயது மூப்பு காரணமாக, தனியாக மருத்துவ தொழிலும் செய்யவில்லை. எனவே, ஓய்வூதிய குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக் குழு தலைவர் பெருமாள் பிள்ளை கூறியதாவது:அ.தி.மு.க., ஆட்சியில், டாக்டர்களின் ஓய்வூதியத்தை குறைக்க முயன்றபோது, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்தார். தற்போது தி.மு.க., ஆட்சி நடவடிக்கைகள், டாக்டர்களுக்கு எதிராக உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.