தமிழகம், 15 லட்சம் ஆண்டுகள் மனிதகுல வரலாற்றுத் தொன்மை கொண்டது. தமிழக அரசின் தொல்லியல் துறை நடத்திய அகழாய்வுகளின், அறிவியல் அடிப்படையிலான பகுப்பாய்வு முடிவுகள் வழியாக, தமிழக வரலாற்றில் புதிய வெளிச்சம் ஏற்பட்டுள்ளது. கீழடி அகழாய்வு, தொல்லியலாளர்கள் இடையில் மட்டுமின்றி, உலகத் தமிழர்கள் இடையிலும், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. பொருநை ஆற்றங்கரை நாகரிகம், 3,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதை, சிவகளை அகழாய்வில் கிடைத்த, நெல் உமியை பகுப்பாய்வு செய்ததன் வழியாக உறுதி செய்ய முடிகிறது.கிருஷ்ணகிரி மாவட்டம், மயிலாடும்பாறை அகழாய்வு முடிவுகள், தமிழகத்தில் 4,200 ஆண்டுகளுக்கு முன், இரும்பு அறிமுகப்படுத்தப்பட்டதை உறுதி செய்கிறது. மேலும், வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல், வரலாற்று காலம் வரையிலான, தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில், அகழாய்வு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.அதன்படி, இந்த ஆண்டு, எட்டு இடங்களில் அகழாய்வு நடத்தப்பட உள்ளது. கடந்த ஆண்டு எட்டு இடங்களில் அகழாய்வு செய்ததைப் போல, இந்த ஆண்டிலும் எட்டு இடங்களில் அகழாய்வு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. எத்தனை கட்டம்?
சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அருகில் உள்ள தொல்லியல் தளமான கொந்தகையில், 10ம் கட்டம்; விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையில் மூன்றாம் கட்டம்; திருவண்ணாமலை மாவட்டம், கீழ்நமண்டியில் இரண்டாம் கட்டம்; புதுக்கோட்டை மாவட்டம், பொற்பனைக்கோட்டையில் இரண்டாம் கட்டமாக ஆய்வு நடத்தப்பட உள்ளது.அதுபோல, தென்காசி மாவட்டம் திருமலாபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானுார், திருப்பூர் மாவட்டம் கொங்கல் நகரம், கடலுார் மாவட்டம் மருங்கூர் ஆகிய ஊர்களில், முதல் கட்ட ஆய்வு நடக்க உள்ளது.இவ்வாண்டு எட்டு இடங்களில் அகழாய்வுப் பணிகளை, நேற்று தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, சுற்றுலா துறை செயலர் மணிவாசன், தொல்லியல் துறை செயலர் உதயசந்திரன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.முன்னதாக தர்ம புரி மாவட்டம் பெரும் பாலையில் நடைபெற்ற அகழாய்வு அறிக்கை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 138 கல்வெட்டுகள் தொடர்பான நுால்களை முதல்வர் வெளியிட்டார். இதற்கு முன் என்னென்ன கிடைத்தன... விஜயகரிசல்குளம்
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் மூன்றாம் கட்ட அகழாய்வு பணி நேற்று துவங்கியது. இங்கு, 25 ஏக்கரில் இரண்டு கட்ட அகழாய்வு பணிகள் நடந்துள்ளன. முதற்கட்ட அகழாய்வில் 3,254 பொருட்கள், இரண்டாம் கட்டத்தில் 4,660 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. மூன்றாம் கட்ட அகழாய்வுக்கு இந்த இடம் அருகே, கிழக்குப்பகுதியில் 1.5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னானுார்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா சென்னானுார் மலையடிவாரம் அருகே, 20 ஏக்கரில் பழங்கால பானையோடுகள் அதிகம் உள்ளன. இங்கும், 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நுண்கற்கருவிகள் தொடங்கி, உடைந்த புதிய கற்கால கைக்கோடரிகள், இரும்புக் காலத்தைச் சேர்ந்த கருப்பு, சிவப்பு பானையோடுகள், இரும்புக் கழிவுகள், பாறை ஓவியங்கள் என வரலாற்றுக்கு முற்பட்ட கால எச்சங்களோடு, வரலாற்றுக் காலத்தின் தொடக்கமான, சங்க காலத்தைச் சேர்ந்த செங்கற்கள் அதிகளவில் உள்ளன. கொங்கல் நகரம்
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே கொங்கல் நகரம், எஸ்.அம்மாப்பட்டி, சோமவாரப்பட்டி உள்ளிட்ட இடங்களில், பெருங்கற்காலத்தைச் சேர்ந்த, பல்வேறு தொல்லியல் பொருட்கள், வரலாற்று ஆய்வாளர்களின் மேற்பரப்பு ஆய்வில் கண்டறியப்பட்டன.முதற்கட்டமாக நேற்று, எஸ்.அம்மாப்பட்டி பகுதியில், 1 ஏக்கரில் அகழாய்வுப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது; பணியை துவக்குவதற்காக, நேற்று காலை அங்கு நடந்த விழாவில், அகழாய்வுக்காக நிலம் வழங்கிய விவசாயிகள் கவுரவிக்கப்பட்டனர். திருமலாபுரம்
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லுார் அருகே திருமலாபுரம் கிராமத்தில், குலசேகரப்பேரி கண்மாய் அருகே சாலை அமைக்க மண் எடுக்கப்பட்டது. அப்போது, நான்கடி ஆழத்தில், தொல்லியல் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. இத்தொல்லியல் மேடானது, 25 ஏக்கரில் உள்ளது. இப்புதைவிடப் பகுதியில் கற்பதுக்கை மற்றும் முதுமக்கள் தாழி வகை ஈமச்சின்னங்கள் அமைந்துள்ளன.இப்பகுதியில் வெண்மை நிறத்தால் அலங்கரிக்கப்பட்ட கிண்ணங்கள் மற்றும் மூடிகள், மெருகூட்டப்பட்ட சிவப்பு பானை ஓடுகள், ஈமத்தாழிகள், செம்பினாலான கிண்ணம், இரும்பிலான பொருட்கள் முக்கிய தொல்பொருட்களாகும். மருங்கூர்
கடலுாரில் இருந்து 32 கி.மீ., தொலைவில், மருங்கூர் கிராமம் உள்ளது. இங்கிருந்து கீழக்கொல்லை செல்லும் சாலையின் வடக்கு பகுதியில், 4 ஏக்கரில் ஒரு தொல்லியல் மேடு உள்ளது. இங்கு, வெளிர்சாம்பல் நிற ரவுலட் மட்பாண்டங்கள், கருப்பு மற்றும் சிவப்பு பானை ஓடுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியின் ஆரம்பகால வரலாற்றுக் காலம் தொடர்பான சான்றுகளை பகுப்பாய்வு செய்ய, இங்கு அகழாய்வு நடத்தப்பட உள்ளது.