உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரேஷனில் தேங்காய், கடலை எண்ணெய் விற்கக்கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்

ரேஷனில் தேங்காய், கடலை எண்ணெய் விற்கக்கோரி விவசாயிகள் உண்ணாவிரதம்

சென்னை,:'கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும்; ரேஷனில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும்' என்பதை வலியுறுத்தி, சென்னையில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு சார்பில், கள் இறக்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில், நேற்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.இதுகுறித்து, சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியதாவது:சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றி, பனை மற்றும் தென்னை மரங்களில், கள் இறக்கி விற்பனை செய்வதற்கு, தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும். விவசாயிகள், இந்த கோரிக்கையை பல ஆண்டுகளாக வலியுறுத்தியும், அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. மேலும், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரைக்கும் வேளாண் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. எனவே, தமிழகத்தில் இறக்கப்படும் கள்ளை, கேரளாவில் விற்க தடை செய்யக்கூடாது. கள்ளச்சாராய வியாபாரத்தில் ஈடுபடும் சமூக விரோதிகளுடன், கள் இறக்கி விற்கும் விவசாயிகளை இணைத்து, அவமானப்படுத்தி வழக்கு போடுவதை, போலீசார் தவிர்க்க வேண்டும்.பாமாயிலை உட்கொள்வதால், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக கண்டறியப்பட்டு உள்ளது. வெளிநாடுகளில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டு, ரேஷனில் விற்கப்படுகிறது. இதற்கு பதிலாக, தமிழக விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காய், எள், நிலக்கடலையில் இருந்து, எண்ணெய் தயாரித்து விற்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகிறது. அரசு செவிசாய்க்காவிட்டால், மாநிலம் முழுதும் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mani . V
ஆக 08, 2024 04:50

யோவ், நாங்களே ரேஷனில் சோமபானத்தை விற்கலாமா? என்று யோசித்துக் கொண்டு இருக்கிறோம். இவர்களுக்கு தேங்காய், கடலை எண்ணெய் விற்கணுமாம்.


Tamil Arasan
ஆக 07, 2024 12:17

தமிழ்நாடு அரசு இந்த அணைத்து கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் ஏனென்றால் விவசாயிகள் அனைவரும் தாங்கள் விளைவித்த தானியங்களுக்கு சரியான விலையில்லாமல் நட்டத்தில் உள்ளனர். இந்த திட்டத்தை கொண்டுவந்தால் மக்களும் பயனடைவார்கள். அதுமட்டும் இல்லாமல் இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகளை ஊக்குவிக்கவேண்டும். விவசாயிகள் அனைவரும் போராட்டத்தில் இறங்கினால் நாடு தாங்காது . நானும் விவசாயிதான் ..


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி