| ADDED : ஜூன் 01, 2024 03:44 AM
சென்னை : பிரபல 'யு டியூபர்' இர்பான், அவரது மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில், கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என, துபாயில் பரிசோதனை செய்தார்; அது குறித்து, அவரது சேனலில் வெளிப்படையாக அறிவித்தார். இந்தியாவில் கருவில் இருக்கும் பாலினத்தை அறிவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இர்பானின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியது.இது குறித்து, மருத்துவம், ஊரக நலப்பணிகள் இயக்கம், இர்பானுக்கு 'நோட்டீஸ்' அனுப்பியதை தொடர்ந்து, சர்ச்சைக்குரிய வீடியோவை நீக்கிய அவர், அதற்கு மன்னிப்பும் கோரினார். இந்த விவகாரத்தில் என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து, மத்திய அரசுக்கு தமிழக மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனர் இளங்கோ மகேஷ்வரன் கடிதம் எழுதியுள்ளார்.இது குறித்து, இயக்குனர் இளங்கோ மகேஷ்வரன் கூறியதாவது: இந்த விவகாரம் துபாயில் நடந்துள்ளது. புதிதாக இருப்பதால், என்ன செய்யலாம் என்ற வழிகாட்டுதல்கள் மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளன.அதேபோல, இந்தியாவில் இருந்து யாராவது வந்து, கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிந்துகொள்ள பரிசோதனை செய்தால், அவர்களுக்கு பரிசோதனை செய்யக்கூடாது என, வெளிநாடுகளை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.