அறிவித்தபடி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டம் அலுவலக வருகைப்பதிவு குறைந்தது; பள்ளிகள் மூடல்
சென்னை:அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் விடுப்பு எடுத்து நடத்திய போராட்டம் காரணமாக, அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணிகள் பாதிக்கப்பட்டன.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' வாயிலாக, நேற்று மறியல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இந்த போராட்டத்தை தவிர்ப்பதற்கான முயற்சியில், அரசு இறங்கியது. சம்பள பிடித்தம்
அதன்படி, அமைச்சர்கள் வேலு, தங்கம் தென்னரசு, மகேஷ், கயல்விழி ஆகியோர் அடங்கிய குழு நேற்று முன்தினம், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சு நடத்தியது.கோரிக்கைகள் குறித்து முதல்வரிடம் கலந்து பேசி முடிவெடுப்பதாக உறுதிஅளித்தனர். இதற்கிடையே, மறியல் போராட்டம் நடத்த உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இரவு 7:30 மணியளவில் தலைமை செயலகம் வந்த முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் குழுவினருடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர், ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளை அழைத்து, அமைச்சர்கள் பேசினர். கோரிக்கைகள் குறித்து முடிவெடுக்க நான்கு வாரம் கால அவகாசம் கேட்டனர். சம்மதிக்க மறுத்த ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தப்படும் என, அறிவித்தனர்.அதன்படி நேற்று, மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதனால், தலைமை செயலகம் உட்பட மாநிலம் முழுதும் உள்ள அரசு அலுவலகங்களில் வருகை குறைவாக இருந்ததால், பணிகள் பாதிக்கப்பட்டன. பட்ஜெட் தயாரிப்பு பணிகளில், திடீர் சுணக்கம் ஏற்பட்டது. பள்ளிகளிலும் ஆசிரியர்கள் வருகை மிகவும் குறைந்து காணப்பட்டதால், மாணவர்களின் கல்வி பாதித்தது. அரசு அலுவலகங்களில் நேற்றைய வருகைப்பதிவு குறித்த விபரங்களை, அனுப்பி வைக்க வேண்டும் என, தலைமை செயலர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.அதன்படி, அனுமதி பெறாமல் விடுப்பு எடுத்தவர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய உள்ளதாக தெரிகிறது. 2,779 பள்ளிகள் முடக்கம்
கடந்த ஆட்சியில் இதே கோரிக்கைகளுக்காக போராடிய ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதனால், இப்போது போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், தற்செயல் விடுப்பு எடுத்து பங்கேற்றனர். பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்களே பாடம் நடத்தும் நிலை உருவானது. பல பள்ளிகளில் காலை உணவுக்கு பின், காத்திருந்த மாணவர்கள் வீட்டுக்கு சென்றனர். சில பள்ளிகளில், வகுப்பறை சாவி, தலைமை ஆசிரியர்களிடம் இருந்த நிலையில், பூட்டப்பட்ட நிலையிலேயே இருந்தது. தற்காலிக ஆசிரியர்கள், இல்லம் தேடி கல்வி திட்ட பயிற்றுநர்கள் உள்ளிட்டோரை வைத்து வகுப்புகள் நடத்தப்பட்டன. தமிழகம் முழுதும் நேற்று, 2,779 பள்ளிகள் இயங்கவில்லை.தமிழகம் முழுதும் உள்ள 1.21 லட்சம் ஆசிரியர்களில், 53,166 ஆசிரியர்கள் நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், 5,138 பேர், பல்வேறு விடுப்புகளை எடுத்திருந்தனர்.
'எங்களின் நம்பிக்கையை முதல்வர் இழந்து விட்டார்!'
சென்னை, எழிலகம் அரசு அலுவலக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். 'தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்; கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தீவிரமாகும்' என்ற கோஷங்களை எழுப்பினர்.
தேர்தலில் ஏமாறுவீர்கள்!
எங்களின் உழைப்பு, தியாகத்தால் தமிழக மக்களை மேம்படுத்துகிறோம். அமைச்சர்களுடன் நேற்று முன்தினம் இரண்டரை மணி நேரம் பேசப்பட்டது. அப்போது, எங்களின் அனைத்து கோரிக்கைகளையும் விரிவாகக் கூறினோம். அவர்கள், முதல்வரிடம் ஆலோசித்துவிட்டு, எங்களிடம் பேசுவதாகக் கூறினர். ஆனாலும் எங்களிடம் பேசவில்லை. இதுவரை நாங்கள் பார்த்த முதல்வர்களிலேயே, கொடுத்த வாக்குறுதிகளை நான்காண்டுகளாக நிறைவேற்றாத ஒரே முதல்வர் ஸ்டாலின்தான். அதனால், தமிழகம் தற்போது கொந்தளிப்பில் உள்ளது. முதல்வரே, எங்களை நீங்கள் ஏமாற்றினால், 2026 தமிழக சட்டசபை தேர்தலில் நீங்கள் ஏமாறுவீர்கள். எங்கள் கோரிக்கைகளுடன், நாங்கள் உங்களிடம் நான்கு ஆண்டுகள் அவகாசம் தந்தோம். தற்போது, நான்கு வார அவகாசம் கேட்கிறீர்- மாயவன்,மூத்த ஒருங்கிணைப்பாளர், 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பு
:பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என, ஜாக்டோ - ஜியோ அமைப்பின் 31 மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களும், அமைச்சர்கள் குழுவிடம் தனித்தனியாக முறையீடு செய்தோம். கடந்தாண்டு கேட்டதுபோல மீண்டும் கால அவகாசம் கேட்டுள்ளனர். நான்கு ஆண்டுகள் காலம் கடத்தி விட்டு, இப்போது அவகாசம் கேட்பது நியாயமற்றது. அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். அடுத்தகட்ட போராட்டம் குறித்து, ஒருங்கிணைப்பாளர்கள் கூடி விரைவில் அறிவிக்கவுள்ளோம். * வெங்கடேசன், தலைவர், தமிழ்நாடு தலைமை செயலக ஊழியர்கள் சங்கம்: நான்கு அமைச்சர்கள் எங்களிடம் இரண்டு மணி நேரம் கோரிக்கைகளை கேட்டறிந்தனர். முதல்வரிடம் பேசி விட்டு வருகிறோம்; இரவு 8:00 மணிக்கு சந்திப்போம் என்றனர். ஆனால், நான்கு வாரம் கால அவகாசம் கேட்கின்றனர். நான்கு ஆண்டுகள் கால அவகாசம் அளித்து விட்டோம். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பதற்கு, இவ்வாறு கால அவகாசம் கேட்கின்றனர். எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, அரசு ஊழியர்களுக்கு முதல்வர் நம்பிக்கை அளித்தார். இப்போது, அரசு ஊழியர்களிடம் அவர் நம்பிக்கையை இழந்து விட்டார். அடுத்தகட்ட போராட்டம் மிகப்பெரிய அளவில் இருக்கும்.* காந்திராஜ், மாநில ஒருங்கிணைப்பாளர், ஜாக்டோ - ஜியோ