| ADDED : செப் 04, 2024 06:45 AM
சென்னை : ''தமிழ்மொழி அழகான, சக்திவாய்ந்த மொழி; தமிழ் மக்கள் போல தமிழ் பேச வேண்டும் என்பது என் விருப்பம். விரைவில் தமிழில் பேசுவேன்'' என, தமிழக கவர்னர் ரவி கூறினார். தமிழ்நாடு ஹிந்தி சாகித்ய அகாடமி மற்றும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லுாரி இணைந்து, 'உலகளாவிய அரங்கில் இந்தியா' என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கத்தை, சென்னை அரும்பாக்கத்தில் நேற்று நடத்தின. விழாவில், தமிழக கவர்னர் ரவி பங்கேற்று, மாணவர்கள் மத்தியில் பேசியதாவது: தமிழ் மொழி அழகான, சக்திவாய்ந்த மொழி; அதை கற்றுக் கொண்டு இருக்கிறேன். தமிழ் மக்கள் போல தமிழ் பேச வேண்டும் என்பது என் விருப்பம்; விரைவில் தமிழில் பேசுவேன். தமிழ் பட்டயப் படிப்பை துவங்குவதற்காக, கவுகாத்தி பல்கலையை தொடர்பு கொண்டுள்ளேன். அனைத்து மாநிலங்களுக்கும், தமிழ் மொழியை எடுத்து செல்ல வேண்டும். தமிழ் பத்திரிகைகளை வாசிக்கிறேன்; யாராவது தமிழில் பேசினால் புரிந்து கொள்கிறேன். உலகின் வேகமாக வளரக்கூடிய பொருளாதார நாடுகளில், இந்தியா முன்னணியில் உள்ளது. ரஷ்யா - உக்ரைனில் மட்டும் போர் நடக்கவில்லை. அனைத்து நாடுகளிலும் சின்ன சின்ன சண்டை, பிரச்னை உள்ளது. ஒற்றுமையாக இருப்பதால், அனைவரது பார்வையும் நம் நாட்டின் மீது இருக்கிறது. 'கொரோனா' தொற்று பரவல் காலத்தில், நம் நாட்டு விஞ்ஞானிகள் தான் தடுப்பூசியை கண்டுபிடித்தனர். இங்கிருந்து தான், 250க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தடுப்பூசியை இலவசமாக கொடுத்தோம். பெண்கள் முன்னுக்கு வராமல், நாடு வளர்ச்சி அடையாது. வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன; யாரும் தேங்கி விட வேண்டாம். பலர் மொழிகளாலும், மதங்களாலும் பிரிவினை உண்டாக்குவர்; அவர்களால் பாதிக்கப்படக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.