உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டவிரோத நியமனங்களை வரன்முறை செய்ய முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

சட்டவிரோத நியமனங்களை வரன்முறை செய்ய முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'அனுமதிக்கப்பட்ட பணிகளில் தான் நியமனங்களை மேற்கொள்ள வேண்டும்; முறையற்ற, சட்டவிரோத நியமனங்களை, அதிகாரிகளும், நீதிமன்றங்களும் வரன்முறை செய்ய முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகாவில் உள்ள தேவிகோடு கிராம பஞ்சாயத்தில், குடிநீர் வினியோக உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில், சேவியர் என்பவர் உள்ளிட்டோரை தினக்கூலி அடிப்படையில் நியமித்து, 1997ல் பஞ்சாயத்து தலைவர் உத்தரவு பிறப்பித்தார். பல ஆண்டுகளாக பணியாற்றுவதால், பணி வரன்முறை கோரி, உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். பணி வரன்முறை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதை எதிர்த்து, தமிழக அரசு, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர். இம்மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வில், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆர்.நீலகண்டன் ஆஜராகி, ''பஞ்சாயத்து பணி விதிகளின்படி, இந்த நியமனங்கள் நடக்கவில்லை. அனுமதிக்கப்படாத பணிகளில், தினக்கூலி ஊழியர்களை பணிவரன் முறை செய்ய முடியாது,'' என்றார்.மனுவை விசாரித்த, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தேர்வு விதிகளை பின்பற்றியே, பணியிடங்களில் நியமிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் தான், நியமனங்களை மேற்கொள்ள வேண்டும்; முறையற்ற, சட்டவிரோத நியமனங்களை, அதிகாரிகளும், நீதிமன்றங்களும் வரன்முறை செய்ய முடியாது.பொது வேலைவாய்ப்பில், சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். சட்டவிரோத, முறையற்ற நியமனங்களை வரன்முறை செய்வதன் வாயிலாக, தகுதியானவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதை அனுமதிக்க முடியாது. சட்டவிரோத நியமனங்களை முறைப்படுத்துவதால், தகுதியான நபர்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுகின்றன. பின் வாசல் நியமனங்கள், வேலையில்லாத லட்சக்கணக்கான இளைஞர்களை பாதிக்கிறது.இரக்கத்தின் அடிப்படையில் பணி வரன்முறையை, நீதிமன்றங்கள் மேற்கொள்ள முடியாது. தேர்வு விதிமுறைகளை பின்பற்றி, அனுமதிக்கப்பட்ட இடங்களில் நியமனங்கள் மேற்கொண்டால், பணிவரன்முறைக்கு நீதிமன்றங்கள் உத்தரவிடலாம்.இந்த வழக்கை பொறுத்தவரை, தினக்கூலி அடிப்படையில், தண்ணீர் வினியோக உதவியாளரை, பஞ்சாயத்து தலைவர் நியமித்துள்ளார். அந்த காலகட்டத்தில், இந்தப் பஞ்சாயத்தில், இந்தப் பணிக்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. எனவே, தனி நீதிபதியின் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஆரூர் ரங்
ஜூன் 30, 2024 09:19

மாநிலங்களில் லட்சக்கணக்கில் சலுகைகள் பெறும் வாரியத் தலைவர்களுக்கு எவ்விதமான கல்வித் தகுதிகளும் நிர்ணயிக்கப் படவில்லை. ஆனால் அத்தலைவர்கள் ஊழியர்களை நியமிக்கலாம். இதுவல்லவா ஊழல்?


GMM
ஜூன் 30, 2024 09:06

அனைத்து அரசு சட்ட விரோத பணி நியமனம் ரத்து செய்ய வேண்டும். ஓய்வு பெற்று இருந்தால், சட்ட படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏராளமான புது, துணை பதவிகள். இவர்களுக்கு பணி விதிகள் இருக்கா? தாசில்தார் பணி விதி இருக்கும். துணை, உதவி, தனி தாசில்தாருக்கு பணி விதி என்ன? அரசு நிர்வாகம் அரசியல்வாதிகள் நிர்வாகமாக மாறிவிட்டது. கட்டுப்படுத்த நீதிமன்றம் தவறி விட்டது.


sethu
ஜூன் 30, 2024 09:47

மக்களுக்கு விழிப்புணர்வூ இல்லை ,நீதிமன்றங்கள் மக்கள் மன்றங்கள் இல்லையே அதுக்கு பேப்பர் கிடைத்தால் போதும் எதையாவது உத்தரவிடவேண்டியது பின் அவன் போன் பண்ணினான் இவன் போன் பண்ணினான் என இரவூ 3 மணிக்கு கூடி நின்று ... மெரினாவில் இடம் கொடுத்தவர்கள் தானே, இன்றைய நீதி ஒரு புதைகுழி சிறிய மனிதர்கள் உள்ளே புதைக்கப்படுவார்கள் பெரிய மனிதர்கள் மீண்டுவருவார்கள் .


hariharan
ஜூன் 30, 2024 08:30

போக்குவரத்துத்துறையின் நடமாடும் எம்ப்ளாயின்ட்மென்ட் எக்ஸ்சேன்ச் கம்பி எண்ணுகிறது. தமிழ்நாடு அரசின் மக்கள் தொடர்பு அதிகாரிகள் நியமனங்கள் என் வேலைவாய்ப்புத்துறை அல்லது TNPSC மூலமாக நிரப்பப்படுவதில்லை? மறைந்த நடராஜன் இன்னும் பல மக்கள் தொடர்பு அதிகாரிகள் நியமனங்கள் கட்சிக்காரர்களுக்கு தன்னிச்சையாக முதலமைச்சர்களால் கொடுத்தது எல்லாம் இந்த நீதிமன்றங்களுக்கு தெரியாதோ? எல்லாமே கண்துடைப்பு.


Kasimani Baskaran
ஜூன் 30, 2024 06:56

எம்பிளாய்மென்ட் exchange எத்தனை பேருக்கு வேலை வாங்கிக் கொடுத்து இருக்கிறது என்று கணக்குக்கேட்டால் ஏமாற்றம்தான் மிஞ்சும். அரை நூற்றாண்டாக அரசு கட்டமைப்புக்கள் திட்டமிட்டு முழுவதுமாக நாசம் செய்யப்பட்டன. இட ஒதுக்கீடு என்பதெல்லாம் கண்துடைப்பு. தலைகீழாக நின்றாவது தகுதியற்றவர்களை உள்ளே திணித்து வேலை கொடுத்து விடுவார்கள். யாராவது நீதிமன்றம் சென்றால் நீதிமன்றமும் ஒய்வு பெறுவது வரை அந்த வழக்கை உருட்டி பணத்தை கறப்பார்கள் . மற்றப்படி ஒன்றும் நடக்காது.


மேலும் செய்திகள்