உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரிப்பு பருப்பு வகைகள், பூண்டு விலை திடீர் உயர்வு

சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரிப்பு பருப்பு வகைகள், பூண்டு விலை திடீர் உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரித்துள்ளதால், பருப்பு வகைகள், பூண்டு விலை மட்டுமே உயர்ந்துள்ளது. தேர்தல் நேரம் என்பதால், அனைத்து மளிகை பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளதாக, தகவல் பரப்பப்பட்டு வருகிறது.மத்திய பிரதேசம், குஜராத், மஹாராஷ்டிரா, ஹரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கொண்டை கடலை உள்ளிட்ட பலவகை பருப்புகள் சாகுபடி செய்யப்படுகின்றன. தமிழகத்தில் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு சாகுபடி நடக்கிறது; ஆனால், உற்பத்தி போதுமான அளவில் இல்லை. எனவே, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களின் பருப்பு வகைகள் தேவையை, வடமாநிலங்கள்தான் பூர்த்தி செய்து வருகின்றன. சிங்கப்பூர், மலேஷியா, துபாய், இலங்கை, வங்க தேசம், நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கும், அங்கிருந்துதான் பருப்பு வகைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. மளிகை பொருட்களின் விலையை, 'ஆன்லைன்' வர்த்தகர்கள் தான், நிர்ணயம் செய்து வருகின்றனர்.சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கும் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட மளிகை பொருட்கள், அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. தற்போது, சீனாவின் ஏற்றுமதி தேவை அதிகரித்துள்ளது. ஆனால், சீனாவில் மட்டுமின்றி, அந்நாடு கொள்முதல் செய்யும் சிறிய நாடுகளிலும், உற்பத்தி குறைந்துள்ளது. எனவே, சீனாவிற்கும், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கும், இந்தியாவில் இருந்து பருப்பு வகைகள், பூண்டு ஆகியவற்றின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இதனால், பருப்பு வகைகளின் விலை, மொத்த விலையில் கிலோவிற்கு, 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை, திடீரென உயர்ந்துள்ளது. சில்லரை விலையில், 40 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளது. பூண்டு மொத்த விலையில் கிலோவிற்கு 40 முதல் 45 ரூபாய் உயர்ந்துள்ளது. சில்லரை விலையில் 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இது நுகர்வோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், லோக்சபா தேர்தல் நேரம் என்பதால், எண்ணெய் வகைகள், சிறுதானியங்கள் உள்ளிட்ட பலவகை மளிகை பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக, சமூக வலைதளங்கள் வாயிலாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.இதுகுறித்து, சென்னை கோயம்பேடு சந்தை மளிகை மொத்த வியாபாரி மகிழ்ச்சி அசோக் கூறியதாவது:சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இரண்டாம் தரம், மூன்றாம் தர பருப்பு வகைகளின் ஏற்றுமதி அதிகரித்து உள்ளது. இதனால், முதல் தர பருப்பு வகைகளின் தேவை அதிகரித்துள்ளதால், அவற்றின் விலை உயர்ந்துள்ளது. இதேபோல பூண்டு விலையும் உயர்ந்துள்ளது. சமையல் எண்ணெய் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், உயர்த்தி விற்கப்படுவதாக தகவல் பரவுகிறது. ஏற்றுமதியை குறைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதால், பருப்பு வகைகள், பூண்டு உள்ளிட்டவற்றின் விலை கணிசமாக குறையும் வாய்ப்புள்ளது. பாமாயில் விலை லிட்டருக்கு இரண்டு ரூபாய் குறைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.கடந்த மாதத்தில் லிட்டர் 175 ரூபாய்க்கு விற்ற தேங்காய் எண்ணெய், இப்போது 190 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நல்லெண்ணெய் விலை 320 ரூபாயிலிருந்து 300 ரூபாயாகவும், பாமாயில் விலை 100லிருந்து 95 ரூபாயாகவும் குறைந்துள்ளது. கடலை எண்ணெய் விலை மாற்றமின்றி, லிட்டர் 200 ரூபாயாகவும், ரிபைண்டு ஆயில் 110 ரூபாயாகவும் தொடர்கிறது. ரஷ்யா - உக்ரைன் போர் துவங்கியபோது, ரிபைண்டு ஆயில் லிட்டர் 220 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இப்போது பாதியாகக் குறைந்துள்ளது.- இருதயராஜா,எண்ணெய் வணிகர் சங்க தலைவர், கோவை

விலை நிலவரம்:

பொருள் - ஜனவரியில் - தற்போதைய விலை கிலோவுக்குதுவரம் பருப்பு - 140 - 165உளுத்தம் பருப்பு - 110 - 135கடலை பருப்பு - 65 - 85மைசூர் பருப்பு- 60 - 85பூண்டு- 165 - 210

காய்கறிகள் விலை உயர்வு

இது குறித்து பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது: தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில், கோடை வெயில் வாட்டி வதைக்க துவங்கியுள்ளது. இதனால், காய்கறிகளின் விளைச்சல் குறைந்துள்ளது. தற்போதுள்ள காய்கறி செடிகளில் இறுதிகட்ட மகசூல் அறுவடை செய்யப்படுவதால், காய்கறிகளுக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. தேவை அதிகரித்துள்ள நிலையில், உற்பத்தி குறைவாக உள்ளதால், அவற்றின் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. தக்காளி, வெங்காயத்தை தவிர்த்து பல காய்கறிகளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பீன்ஸ் 180 ரூபாய்க்கும், கேரட் 70, பீட்ரூட் 60, கோஸ் 40, சேனை கிழங்கு 60, வெண்டைக்காய் 50, பச்சை மிளகாய் 60, வெள்ளரிக்காய் 50, எலுமிச்சை 130, அவரைக்காய் 60 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதேபோல பலவகை காய்கறிகளும் கிலோ 50 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதால், நுகர்வோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலைகள், கடந்த ஒரு மாதத்தில் பெருமளவில் உயர்ந்துள்ளன.பருப்பு வகைகள்,மஞ்சள், மிளகாய்த் துாள் விலை கிலோவுக்கு 15 ரூபாய் வரை உயர்ந்துள்ளன.மிளகு, சீரகம், மிளகாய், மல்லி உள்ளிட்ட பொருட்களின் விலை கிலோவுக்கு 50 ரூபாய் வரையும், எண்ணெய் விலைகள் லிட்டருக்கு 30 ரூபாய் வரையும் உயர்ந்துள்ளன. இதனால், ஏழை, நடுத்தர குடும்பங்களின் மாதந்திர செலவு2,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு, அவற்றின் தட்டுப்பாடுஒரு காரணம் என்றால், பதுக்கலை தடுக்கத் தவறிய தமிழக அரசின் அலட்சியம், இன்னொரு காரணம். எனவே, விலைவாசி உயர்வுக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என்று, செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த,தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் துவரம் பருப்பு, பாமாயிலின் அளவை இரண்டு கிலோவாக உயர்த்த வேண்டும். ரேஷன் கடைகளில் உளுந்து, மளிகைப் பொருட்களை மானிய விலையில் வழங்க வேண்டும்.- நமது நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஏப் 24, 2024 19:43

இப்பவாவது தமிழக மக்களுக்கு திருட்டு திமுகவை பற்றி புரியவேண்டும் திமுகவை ஒழிக்க முயலவேண்டும், நூறுக்கும் இருநூறுக்கும் ஆசைப்படுவதை விட்டு


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ