சென்னை:கோடை காலத்தில் பல் தொடர்பான பாதிப்புகள் அதிகரித்துள்ளதால், சென்னை பல் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 1,800க்கும் மேற்பட்டோர் தினமும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சென்னை பிராட்வே பகுதியில், தமிழ்நாடு பல் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில், பல் தொடர்பான பரிசோதனை, அறுவை சிகிச்சை, பல் செட் உள்ளிட்ட பல்வேறு விதமான சிகிச்சைகள் 5 ரூபாய் முதல் அதிகபட்சம் 500 ரூபாய் கட்டணத்தில் அளிக்கப்படுகின்றன. இதனால், ஏழை, எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் பல் மருத்துவமனையாக உள்ளது.இந்நிலையில், கோடை காலத்தில், அதிகப்படியான ஐஸ்கிரீம், சாக்லெட் உள்ளிட்ட உணவு வகைகளால், பல் சொத்தை, ஈறு பிரச்னை உள்ளிட்டவற்றால் மக்கள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. எனவே, பல் தொடர்பான பிரச்னைகளுக்கு சிகிச்சை பெற, தற்போது, அரசு பல் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தினமும், 1,800 பேர் வரை சிகிச்சைக்கு வருகின்றனர்.இதுகுறித்து, பல் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர் ஸ்ரீதர் பிரேம்குமார் கூறியதாவது:அரசு பல் மருத்துவமனைக்கு வருவோர் வசதிக்காக, புறநோயாளிகள் காத்திருப்புக்கான வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், துறை வாரியாக நோயாளிகள் அமர இருக்கைகள் அமைக்கப்பட்டு, எவ்வித இடையூறும் இல்லாமல் சிகிச்சை பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளை, தனியார் மருத்துவமனைகளில் மேற்கொண்டால், 50,000 ரூபாய் வரை செலவாகும். குறிப்பாக, ஒரு பல் செட் விலை, 120 ரூபாய்க்கு அரசு மருத்துவமனையில் அளிக்கப்படுகிறது. அதேநேரம், தனியார் மருத்துவமனையில் 10,000 ரூபாய் வரை செலவாகிறது.இவ்வாறு அவர் கூறினார்.மக்களுக்கு கோரிக்கை!
அரசு பல் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இம்மருத்துவமனையில், தனியார் மருத்துவமனைகளுக்கு இணையான சிகிச்சை இலவசமாகவும், மிகக் குறைந்த கட்டணத்திலும் அளிக்கப்படுகிறது. பல் தொடர்பான அறுவை சிகிச்சைகளும், முதல்வர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்களுக்கு சிறந்த வகையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும், இம்மருத்துவமனையை பல் பாதிப்பு இருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும்.- ககன்தீப் சிங் பேடி,செயலர், மக்கள் நல்வாழ்வு துறை
சிகிச்சை பெற்றோர் விபரம்!
ஆண்டுகள் - எண்ணிக்கை2022 - 4,41,7522023 - 4,66,2882024 (மே மாதம் முதல் வாரம் வரை) - 50,000க்கு மேல்