ராசிமணலில் அணை கட்ட பழனிசாமியிடம் வலியுறுத்தல்
சேலம்: தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர், சேலத்தில் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில், முன்னாள் முதல்வர் பழனிசாமியிடம் நேற்று மனு அளித்தனர். தொடர்ந்து சங்க பொதுச்செயலர் பாண்டியன் அளித்த பேட்டி:தமிழகம் வரும் காவிரி உபரிநீரை தடுத்து நிறுத்தவே, மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிக்கிறது.அதை தடுத்து, காவிரி குறுக்கே ராசிமணலில் அணை கட்டி டெல்டா விவசாயத்தை பாதுகாப்பதோடு, உபரிநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு சட்டரீதியாக அங்கீகாரம் உள்ளது. இது தொடர்பாக சட்டசபையில் வலியுறுத்த, பழனிசாமியிடம் மனு அளித்து விளக்கினோம். தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டம் நடத்தி, ராசிமணலில் அணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.