சென்னை:மாநிலம் முழுதும், 11,113 அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில், 'பிராட்பேண்ட்' இணைய வசதி வழங்கப்பட்டு உள்ளதாக, பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.அரசு பள்ளிகளில், 'ஆன்லைன்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கற்றல், கற்பித்தல் பணிகளை மேம்படுத்த, பல்வேறு திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அதேபோன்று, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளிக் கல்வி பணியாளர்கள் சார்ந்த நிர்வாக பணிகளை, 'டிஜிட்டல்' வழியில் மேற்கொள்ளவும், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்த அடிப்படையில், 8,030 அரசு தொடக்க பள்ளிகளிலும், 3,083 அரசு நடுநிலை பள்ளிகளிலும், 'பிராட்பேண்ட்' இணையதள இணைப்பு வசதிகள் நிறைவு பெற்றுள்ளதாக, பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது. இந்த பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டு முதல், ஆன்லைன் வழியில், 'யூ டியூப்' வீடியோ பாடங்கள், வீடியோ கான்பரன்ஸ் வழி பாடங்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.