UPDATED : மே 01, 2024 04:54 AM | ADDED : ஏப் 30, 2024 10:15 PM
சென்னை:தேசிய சதுப்பு நில வரைபடத்தில், ஊட்டி ஏரி இடம் பெற்றுள்ளதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, தமிழக அரசுக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் ஊட்டி ஏரி பகுதியில், சதுப்பு நிலத்தில் கான்கிரீட் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால், ஏரியின் இயற்கை பரப்பு குறைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, ஊட்டி ஏரியில் அடுத்தகட்ட கட்டுமானங்களை உடனடியாக நிறுத்துமாறு, நீலகிரி சுற்றுச்சூழல் சங்கங்களின் கூட்டமைப்பு, கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தியின் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கு பதிந்து தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி அருண்குமார் தியாகி, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:ஊட்டி ஏரி பகுதியில் சதுப்பு நிலத்தில், கான்கிரீட் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டது தொடர்பாக நீலகிரி கலெக்டர், தமிழ்நாடு சதுப்புநில ஆணைய உறுப்பினர் செயலர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.சதுப்பு நில ஆணைய அறிக்கையில், ரயில்வே துறையால் அமைக்கப்பட்ட வாகன நிறுத்துமிடம் பிரச்னை பற்றி மட்டுமே குறிப்பிடப்பட்டு உள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஊட்டி ஏரியில் மேற்கொண்டுள்ள கட்டுமானம் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. மத்திய சுற்றுச்சூழல் துறையின் தேசிய சதுப்பு நில வரைபடத்தில், ஊட்டி ஏரி இடம் பெற்றுள்ளதா என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிபார்த்து தெரிவிக்க வேண்டும்.வழக்கின் அடுத்த விசாரணை மே 6ல் நடக்கும். அதற்குள் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம், வனத்துறை, தமிழக சுற்றுச்சூழல் துறை செயலர், மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு ஈரநில ஆணையம், ஊட்டி நகராட்சி ஆகிய அரசு அமைப்புகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.