அவனியாபுரம்: ''முதல்வர் தொகுதியிலேயே ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதால் சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சந்தி சிரிக்கின்ற சூழ்நிலையை பார்க்கிறோம்'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.பரமக்குடியில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் பங்கேற்றுவிட்டு சென்னை செல்ல மதுரை விமான நிலையம் வந்த அவர் கூறியதாவது:தி.மு.க., ஆட்சியில் அண்மை காலமாக பல்வேறு கட்சித் தலைவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்த வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. நான்கு நாட்களுக்கு முன் சேலத்தில் முன்னாள் மண்டல குழுத் தலைவர் சண்முகம் கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார்.முதல்வரின் கொளத்துார் தொகுதியிலேயே ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவர் படுகொலை செய்யப்பட்டிருப்பதால் சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சந்தி சிரிக்கின்ற சூழ்நிலையை தான் பார்க்கிறோம். சட்டம் ஒழுங்கு படுபாதாளத்தில் சென்று விட்டது. போலீசாரை கண்டு யாரும் அச்சப்படுகின்ற சூழல் இல்லை. சர்வ சாதாரணமாக கொலை நடக்கிறது. ஆட்டை வெட்டுவதைப் போல், ரவுடிகள் வெட்டி சாய்ப்பதை பார்க்கிறோம்.விக்கிரவாண்டி இடைத்தேர்தலை பொறுத்தவரை எங்கள் தலைமை முடிவு தான். ஜெயலலிதா இருந்தபோதே ஐந்து இடை தேர்தலை புறக்கணித்துள்ளோம். கருணாநிதியும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் வாக்காளர்களை எப்படி கொடுமைப்படுத்தினார்கள் என்பது நாடறிந்தது. அங்கு 30க்கும் மேற்பட்ட இடத்தில் வாக்காளரை அழைத்துச் சென்று பட்டியில் அடைத்து வைத்தார்கள். ஜனநாயக படுகொலை அரங்கேறியது. விசுவாசமில்லாத பன்னீர்செல்வம்
விக்கிரவாண்டியில் ஒரு வீட்டில் இருந்து சட்டைகள், வேட்டிகளை ரோட்டில் போடுகிறார்கள். தி.மு.க., ஆட்சிக்கு வந்தாலே ஜனநாயகம் செத்துவிடும்.கட்சியில் சேர பன்னீர்செல்வம் நினைக்கலாம். ஆனால் எங்கள் தலைமை அதற்கு உடன்படாது. பொதுக்குழு கூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவரை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கிவிட்டோம். போடி தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்ட போது எதிர்த்து போட்டியிட்ட வெண்ணிற ஆடை நிர்மலாவிற்கு தலைமை ஏஜன்ட்டாக இருந்தார். ஒன்றாக இருந்த போது அவர் பல கோரிக்கைகளை வைத்தார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக சொன்னார். யாரை சுட்டிக்காட்டி சொன்னார் என்பது அனைவருக்கும் தெரியும். நாங்கள் ஆணையம் வைத்து விசாரித்தோம். விசாரணை ஆணையம் அமைக்க என்னை நிர்பந்தப்படுத்தினார். சட்டசபை தேர்தலில் ஒருங்கிணைப்பாளர் பதவி கேட்டார்.2019ல் தேனியில் அவர் மகன் போட்டியிட்ட தொகுதி தவிர மற்ற தொகுதிகளில் வேலை செய்யவில்லை. கட்சியை பற்றி கவலைப்படாமல் மகனை பற்றி கவலைப்பட்டார். ஒற்றை தலைமை வேண்டும் என்கிறபோது அனைவரும் ஒருமித்த கருத்தோடு இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியதற்கு அவர் ஒத்துக் கொள்ளவே இல்லை. அதன் பிறகு தான் அவர் நீதிமன்றம் சென்றார். ரவுடிகளை வைத்து கட்சியினரை தாக்கி தலைமை அலுவலகத்தில் கதவுகளை உடைத்து பொருட்களை சூறையாடி திருடிச் சென்றனர். இரட்டை இலையை முடக்க வழக்கு தொடர்ந்தார்.லோக்சபா தேர்தலிலாவது கட்சிக்கு இணக்கமாக இருப்பார் என்று பார்த்தால் ராமநாதபுரத்தில் எங்கள் வேட்பாளரை எதிர்த்து, இரட்டை இலை எதிர்த்து போட்டியிட்டார். இவர் எப்படி விசுவாசமாக இருப்பார். அவர் விசுவாசமாக இருந்ததாக வரலாறு இல்லை. அ.தி.மு.க.,வில் அவர் இணைய ஒரு சதவீதமும் வாய்ப்பில்லை. நான் துரோகி அல்ல
அண்ணாமலை பச்சோந்தி. துரோகியின் மொத்த உருவமே அவர்தான். எங்கள் தலைவர்களை அவதுாறாக, கீழ்த்தரமாக விமர்சித்தால் நாங்கள் எப்படி பொறுத்து கொள்வோம். அவர் கட்சித் தலைவர் பதவிக்கு பொருத்தம் இல்லாதவர். நாங்கள் அவரைப் போல் 'அப்பாயின்மென்ட்ல' வரவில்லை. கண்ணாடியில் முகத்தை பார்த்து அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.கள்ளச்சாராய விவகாரத்தில் மாநில அரசு விசாரித்தால் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட மாட்டார்கள். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வழக்கு சிவில் வழக்கு. இதற்கு 100 போலீசாரை வைத்து தேடுகிறார்கள். செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதால் எங்கள் மாவட்ட செயலாளர் மீது பழி சுமத்தி தேடுகின்றனர். மதுவிற்கு பழக்கமானவர்கள் உடனடியாக நிறுத்த முடியாது என்பது எனக்கு வந்த தகவல். எனவே படிப்படியாக குறைத்து தான் பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடியும் என்றார்.
'அமீபா நுண்ணுயிர் பரவல்முன்னெச்சரிக்கை அவசியம்'
பழனிசாமி அறிக்கை:கேரளாவில், அமீபா நுண்ணுயிர் பரவலால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு, மூவர் இறந்துள்ளதாக வரும் செய்திகள், கவலை அளிக்கின்றன. அசுத்தமான நீரின் வழியாக பரவும், இந்த நுண்ணுயிர் கிருமி, குழந்தைகளை தொற்றும் ஆபத்து அதிகம் உள்ளது. தமிழகத்தில் இத்தகைய பரவல்கள் ஏற்படாத வகையில், முன்னெச்சரிக்கையுடன் அரசு செயல்பட வேண்டும்; மக்களை காப்பதில், முதல்வர் அதிக கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்