உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழனியில் இன்று முத்தமிழ் முருகன் மாநாடு

பழனியில் இன்று முத்தமிழ் முருகன் மாநாடு

சென்னை:முருகபெருமானின் பெருமையை பக்தர்கள் அறியும் வகையில், பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்றும், நாளையும் நடக்கிறது. இம்மாநாடு தொடர்பான பணிகளை மேற்கொள்ள, அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில், 20 பேர் இடம் பெற்ற ஒருங்கிணைப்புக் குழுவும், கமிஷனர் ஸ்ரீதர் தலைமையில், 11 பேர் இடம்பெற்ற செயற்பாட்டுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.மாநாட்டில் இந்தியா, வெளிநாடுகளிலிருந்து பங்கேற்க, ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க, தனி இணையதளம் துவக்கப்பட்டது. இதுவரை, ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். 1,003 பேர் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்து உள்ளனர்.மாநாட்டில் வேல் அரங்கம், அருள்தரும் அறுபடை முருகனின் மூலவர் காட்சிகள், மெய்நிகர் காட்சிகள், முப்பரிமாண பாடலரங்கம், சிறப்புப் புகைப்பட கண்காட்சி இடம் பெறுகிறது.முதல் நாள் நிகழ்ச்சியில், மாநாட்டு கொடியை ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் ஏற்றி வைக்கிறார். சிறப்பு கண்காட்சியை, அமைச்சர் பெரியசாமியும், வேல் கோட்டத்தை திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தமும், பழனி எம்.எல்.ஏ., செந்தில்குமாரும் துவக்கி வைக்கின்றனர்.அதனைத் தொடர்ந்து, மடாதிபதிகள் அருளாசியும், நீதிபதிகள் சிறப்புரையும் இடம் பெறுகிறது. பின், மாநாட்டு விழா மலர் மற்றும் ஆய்வு மலர்கள் வெளியிடப்படுகின்றன. 'முத்தமிழில் முந்து தமிழ்' என்ற தலைப்பில் சிந்தனை மேடையும், இசை, நாட்டிய நிகழ்ச்சிகளும், கருத்தரங்கம், கலைநிகழ்ச்சிகளும் நடக்கின்றன.நாளைய நிகழ்ச்சியை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைக்கிறார். நிறைவு விழாவில் ஆன்மிகத்திற்கு சேவையாற்றியவர்களுக்கு, 15 முருகனடியார்களின் பெயரில் விருதுகளை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் வழங்கி கவுரவிக்கிறார்.திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாசியுடன், மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ