உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  யு.ஜி.சி., நெட் தேர்வு விடைக்குறிப்பு கட்டணம் வசூல்: என்.டி.ஏ., விளக்கம்

 யு.ஜி.சி., நெட் தேர்வு விடைக்குறிப்பு கட்டணம் வசூல்: என்.டி.ஏ., விளக்கம்

சென்னை: 'யு.ஜி.சி., 'நெட்' தேர்வு விடைக்குறிப்பு மேல் முறையீட்டிற்கு, ஒவ்வொரு விடைக்கும் 200 ரூபாய் வசூலிப்பது, லாப நோக்கத்துக்காக அல்ல' என, தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. நாடு முழுதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் உதவி பேராசிரியராக பணியாற்றவும், இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறவும், பிஎச்.டி., மாணவர் சேர்க்கைக்காகவும், யு.ஜி.சி., 'நெட்' தேர்வு நடத்தப்படுகிறது. இதை, தேசிய தேர்வுகள் முகமை நடத்துகிறது. நடப்பாண்டுக்கான யு.ஜி.சி., நெட் தேர்வு, கடந்த ஜூன் மாதம் 22 முதல், 30ம் தேதி வரை நடந்தது. மொத்தம், 84 பாடப்பிரிவுகளுக்கு தேர்வு நடந்தது. இதற்கான விடை குறிப்பு, கடந்த 16ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வர்கள், விடைக் குறிப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். இதற்கு ஒவ்வொரு விடைக்கும், 200 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவித்தது. இதற்கு, நாடு முழுதும் தேர்வர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். இது தொடர்பாக, தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்ட அறிக்கை: யு.ஜி.சி., நெட் விடைக்குறிப்பு, மேல் முறையீட்டுக்கான கட்டணம் மிக அதிகம் என, தேர்வர்கள் தெரிவித்துள்ளது, எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. விடைக்குறிப்புக்கு மேல்முறையீடு செய்யும் முறை, அனைத்து மாணவர்களுக்கும் நியாயமாக இருக்கும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. தேர்வர் ஒருவர் மேல் முறையீடு செய்தால், அனைவரும் பயனடைவர். ஒரு கேள்விக்கு, ஒரே ஒரு தேர்வர் மேல்முறையீடு செய்தாலும், அதை துறை சார்ந்த வல்லுநர் குழு ஏற்றுக் கொண்டால், அந்த தேர்வை எழுதிய அனைத்து தேர்வர்களுக்கும், அதனால் பயன் கிடைக்கும். மேல்முறையீடு செய்த விடை ஏற்றுக்கொள்ளப்பட்டால், தேர்வு கட்டணம் 200 ரூபாய் திரும்ப செலுத்தப்படும். இந்த கட்டணம், ஆதாரமற்ற மற்றும் தேவையற்ற மேல்முறையீடுகளை தடுக்கவே வசூலிக்கப்படுகிறது; லாபம் ஈட்டுவதற்காக அல்ல. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை