உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய் கட்சிக்கு மாணவர்கள் போவதை தடுக்க தி.மு.க., எடுக்கும் புது முயற்சி

விஜய் கட்சிக்கு மாணவர்கள் போவதை தடுக்க தி.மு.க., எடுக்கும் புது முயற்சி

சென்னை:நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தில், மாணவர்கள் இணைவதை தடுக்கும் வகையில், கல்வி நிலையங்களில், தமிழ் மாணவர் மன்றம் அமைக்க, தி.மு.க., மாணவரணி ஆலோசனக் கூட்டம் செப்., 6ல் நடக்கிறது.நடிகர் விஜய், தன் பெயரில் மக்கள் இயக்கம் நடத்தியபோது, 234 சட்டசபை தொகுதிகளிலும், 10, 12ம் வகுப்பு தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி விருது, ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை விஜய் துவக்கியதும், ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையில், அவருடைய கட்சியில் பல லட்சம் மாணவர்கள் இணைந்தனர்.தமிழக வெற்றி கழக மாணவர் அணி உருவாகும் பட்சத்தில், தற்போதைய உறுப்பினர்களைவிட இன்னும் அதிகமான உறுப்பினர்கள் கட்சியில் சேர வாய்ப்பு உள்ளது. விஜய் தலைமையை மாணவர்கள் ஏற்று செல்வதை தடுக்கும் வகையில், அமைச்சர் உதயநிதி தலைமையில், தி.மு.க.,வில் மாணவர்கள் சேர, அக்கட்சியின் மாணவரணி வியூகம் வகுத்துள்ளது. குறிப்பாக, கல்வி நிலையங்களில், தமிழ் மாணவர் மன்றம் அமைப்பு உருவாக்கப்பட உள்ளது. இது தொடர்பாக ஆலோசிக்க, செப்., 6ல், தி.மு.க., மாணவரணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது.தி.மு.க., மாணவரணி மாநில செயலர் எழிலரசன் எம்.எல்.ஏ., அறிக்கை:கல்வி நிலையங்களில், தமிழ் மாணவர் மன்றம் ஏற்படுத்துதல்; ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் ஆகிய அமைப்புக்கான மாணவர் அணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் நடத்துதல் குறித்து ஆலோசிக்க, மாணவர் அணி நிர்வாகிகள் கூட்டம் செப்., 6ல், சென்னை அறிவாலயத்தில் நடக்கிறது.தமிழ் மாணவர் மன்ற சேர்க்கை விண்ணப்ப படிவம் மற்றும் மன்ற அடையாள அட்டையை, மாணவர் அணி அமைப்பாளர்களிடம், துணை பொதுச்செயலர் அ.ராஜா, அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் வழங்கி, சிறப்புரை ஆற்றுவர்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

வைகுண்டேஸ்வரன்
ஆக 29, 2024 14:53

இது வருடாவருடம் திமுக நிகழ்த்தும் கட்சி வளர்ப்புப் பணி தான். விஜய் கட்சி ஆரம்பிச்சாலும் இல்லைன்னாலும் இது நடந்து கொண்டே இருக்கும் வழக்கமான நிகழ்வு தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை