குறட்டை நோயாளிகளுக்கு புதிய கருவி
மதுரை : குறட்டை விடும் நோயாளிகள் அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலையில் இருந்தால், முதல்வரின் இலவச காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 'சிபாப்' அல்லது 'பைபாப்' கருவி இலவசமாக வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும்.அதிக உடல் எடை உள்ளவர்கள், கழுத்து குட்டையாக உள்ளவர்கள், நீண்டநாள் மூக்கடைப்பு, டான்சில் பிரச்னை, நாக்கு பெரிதாக இருப்பவர்கள் மற்றும் கீழ்த்தாடை உள் வாங்கியிருப்பவர்களுக்கு துாக்கத்தில் குறட்டை சத்தமாக வெளிப்படும். மூக்கில் இருந்து தொண்டை வரை காற்றும் செல்லும் வழியில் அடைப்பு இருந்தால் குறட்டை வரும். துாக்கத்தின் போது பொதுவாக உடல் தசைகள் தளர்வடையும். தொண்டை, நாக்கு, அண்ணப்பகுதிகளில் உள்ள தசைகள் தளர்வடையும் போது காற்று செல்லும் வழி தடைபடுகிறது அல்லது அடைபடுவதால் குறட்டை சத்தம் வெளிப்படும். இவர்கள் இரவில் துாங்கி எழுந்தாலும் காலையில் புத்துணர்வு இல்லாமல் சோர்வாக காணப்படுவர். அறுவை சிகிச்சை இலவசம்
மூக்கு, தொண்டை, வாய் என எந்த இடத்தில் காற்றடைப்பு இருக்கிறது என்பதை ஓ.எஸ்.ஏ., கண்காணிப்பு கருவி மூலம் கண்டறியலாம். குறட்டையால் நுரையீரலுக்கு செல்லும் காற்றின் அளவு, ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு, அதனால் ஏற்படும் இதய துடிப்பு மாற்றத்தை கருவியில் கண்டறிந்த பின் காது, மூக்கு தொண்டைப்பிரிவு சார்பில் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த அறுவை சிகிச்சை முறை எல்லோருக்கும் சாத்தியமில்லாதது. ஆஸ்துமா, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உட்பட பல்வேறு இணைநோய் உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வது சிக்கலான விஷயம். சில நேரங்களில் டாக்டர்களே அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைப்பதில்லை. பாதுகாப்பு தரும் கருவி
அதிக உடற்பருமன் என்பது சமீபத்திய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்களால் உடற்பருமனால் அவதிப்படுபவர்கள் இரவில் சரியான துாக்கமின்மையால் பகலில் வாகனம் ஓட்டும் போது திடீர் துாக்கத்தால் தடுமாறி விபத்தை சந்திக்கும் வாய்ப்புள்ளது. அலுவலகப்பணி அல்லது பிற தொழிலில் ஈடுபட்டாலும் மனதும் உடலும் முழுமையாக செயல்படாமல் குறட்டை நோயாளிகள் தவிக்கின்றனர். இவர்கள் இரவில் நல்ல துாக்கத்தை மேற்கொள்வதற்கு என 'சிபாப், பைபாப்' என்ற வகையில் தனியாக கருவிகள் உள்ளன. துாங்கும் போது இந்த கருவியை மூக்கில் மாட்டிக் கொண்டால் காற்றுப்பாதை அடைப்பை அழுத்தத்தின் மூலம் சரிசெய்து சீரான மூச்சுவிடுதலையும் குறட்டை சத்தத்தை குறைப்பதையும் உறுதி செய்கிறது. வெளியூர் செல்லும் போது பையில் எடுத்துச் செல்லும் வகையில் உள்ள இந்த கருவியின் விலை ரூ.60 ஆயிரம் முதல் ரூ.ஒரு லட்சம் வரை. அறுவை சிகிச்சை செய்ய முடியாதவர்களுக்கு முதல்வரின் இலவச காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இந்த கருவியை இலவசமாக வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் என்கின்றனர் குறட்டையால் பாதிக்கப்படுவோர். கருவி செயல்படுவது எப்படி
இந்த கருவியில் இருந்து குழாய் வழியாக வெண்டிலேட்டர் முறையில் ஆக்சிஜன் செலுத்தப்படும். துாங்கும் போது குறட்டையினால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் நிலையில் இருந்த கருவி தேவையான அளவு ஆக்சிஜனை செலுத்தி விடும். மேலும் நிம்மதியான துாக்கத்திற்கும் வழிவகுக்கும்.