சென்னை : 'ஆந்திரா மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் மிதமான மழை நீடிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மையம் வெளியிட்ட அறிக்கை:
மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக் கடலில், புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரமடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், சென்னைக்கு கிழக்கே வங்கக் கடலில் இரு காற்று இணைவு ஏற்படும். இத்தகைய சூழலில், மேகமூட்டம் மற்றும் குளிர்ந்த சூழல் நிலவும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் வரையிலான மாவட்டங்களில், அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு மாலை, இரவு நேரங்களில் மிதமான மழை பெய்யும். தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில், இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும். இந்த நிலை, செப்., 9 வரை நீடிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.