உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சீமான் வீட்டு காவலாளியை விடுவிக்க எதிர்கட்சிகளிடம் ஆதரவு

சீமான் வீட்டு காவலாளியை விடுவிக்க எதிர்கட்சிகளிடம் ஆதரவு

சென்னை:சீமான் வீட்டு பாதுகாவலரை விடுவிக்க, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி உள்ளிட்டோரின் ஆதரவை, முன்னாள் ராணுவ வீரர்கள் திரட்டி வருகின்றனர்.நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின், நீலாங்கரை வீட்டில், நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகார் குறித்து விசாரிக்க, சென்னை, வளசரவாக்கம் போலீசார், கடந்த மாதம் 27ம் தேதி சம்மன் ஒட்டினர். அப்போது வீட்டின் பாதுகாவலராக இருந்த, முன்னாள் ராணுவ பாதுகாப்பு படை வீரர் அமல்ராஜ், காவலாளி சுபாகர் ஆகியோர். சம்மனை கிழித்து, போலீசாரை தாக்கியதாகவும், துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின், இருவரும் கைது செய்யப்பட்டனர்.ஜாமின் கோரி, இருவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், அம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ஆளும் கட்சியினரின் அழுத்தம் காரணமாகவே, அவர்களுக்கு ஜாமின் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான நல்வாழ்வு சங்கத் தலைவர் சுரேஷ்பாபு வாயிலாக, எதிர்கட்சிகளின் ஆதரவை, நாம் தமிழர் கட்சி திரட்டி வருகிறது.நேற்று முன்தினம், சுரேஷ்பாபு தலைமையில், முன்னாள் ராணுவ வீரர்கள், தமிழக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியை சந்தித்து, ஆதரவு கோரினர். தொடர்ந்து, பா.ஜ., - த.வெ.க., - பா.ம.க., உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.இது குறித்து, நா.த.க., நிர்வாகிகள் கூறியதாவது:சீமான், தி.மு.க.,வையும் தமிழக அரசையும் கருத்தியல் ரீதியில் எதிர்த்துப் பேசி வருகிறார். அதற்கு உரிய பதில் சொல்ல முடியாமல், தி.மு.க., தடுமாறுகிறது. இதற்கு பழி வாங்கும் விதமாக, சீமான் வீட்டு பாதுகாவலரை பிடித்து, துன்புறுத்தி வருகின்றனர். முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரரை, கண்ணியக் குறைவாக நடத்தியதுடன், அடித்து துன்புறுத்தி, பொய்வழக்கு பதிவு செய்து, கைது செய்துள்ளனர். இப்பிரச்னையை சட்டப்படியாக சந்தித்து வருகிறோம். ஆனால், எவ்வித தவறும் செய்யாதவர்களை, துன்புறுத்தி வருவது தொடர்வதால், இவ்விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் ஆதரவையும் திரட்டி, ஆளும் கட்சிக்கு அழுத்தம் கொடுக்க, இம்முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ