உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க.,வில் தென்மாவட்டத்திற்கு ராஜ்யசபா சீட் பழனிசாமியின் ‛பலே திட்டம்

அ.தி.மு.க.,வில் தென்மாவட்டத்திற்கு ராஜ்யசபா சீட் பழனிசாமியின் ‛பலே திட்டம்

மதுரை : அ.தி.மு.க.,வுக்கு எம்.எல்.ஏ., எண்ணிக்கை அடிப்படையில் ஒரு ராஜ்யசபா 'சீட்' கிடைக்கும் நிலையில், அதை சட்டசபை தேர்தலை கணக்கிட்டு தென்மாவட்டத்திற்கு ஒதுக்க பொதுச்செயலாளர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.தமிழகத்திற்கென 18 ராஜ்யசபா எம்.பி.,க்கள் உள்ளனர். இதில் தி.மு.க., எம்.பி.,க்கள் வில்சன், சண்முகம், அப்துல்லா மற்றும் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரின் எம்.பி., பதவி ஜூலை 24ல் நிறைவு பெறுகிறது.அ.தி.மு.க.,வில் சந்திரசேகரன் மற்றும் அ.தி.மு.க., ஆதரவுடன் எம்.பி.,யான பா.ம.க., அன்புமணியின் பதவி காலமும் ஜூலையில் முடிகிறது. எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை அடிப்படையில் அ.தி.மு.க.,வுக்கு ஒரு 'சீட்' உறுதியாக கிடைக்கும். அதை தே.மு.தி.க., பெற நினைத்த நிலையில், 'நாங்க அப்படி சொல்லலயே' என பழனிசாமி 'டிவிஸ்ட்' வைத்தார்.

தென்மாவட்டத்திற்கு வாய்ப்பு

சட்டசபை தேர்தலுக்கு ஓராண்டே உள்ள நிலையில் கூட்டணிகள் மாற வாய்ப்புள்ளதால், தே.மு.தி.க.,வுக்கு 'சீட்' வழங்க அ.தி.மு.க., விரும்பவில்லை. கட்சியில் தென்மாவட்ட முகமாக பார்க்கப்பட்ட பன்னீர்செல்வம் இல்லாத நிலையில் தென்மாவட்டங்களில் அதிக ஓட்டுகள் உடைய முக்குலத்தோர் சமூகத்தை கவரும் வகையில் ராஜ்யசபா 'சீட்' தர அ.தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது.தற்போது தென்மாவட்டத்திற்கென, பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தர்மர் அ.தி.மு.க., எம்.பி.,யாக உள்ளார். இவர் மறவர் சமூகத்தைச் சேர்ந்தவர். இச்சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்ட நிலையில், முக்குலத்தோரில் இதுவரை பதவி வழங்கப்படாமல் இருக்கும் அகமுடையார் சமூகத்திற்கு வாய்ப்பு அளிக்க பழனிசாமி முடிவு செய்துள்ளார். இச்சமூகத்திற்கு தென்மாவட்டங்களில் 30 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுகள் உள்ளன. இதன்மூலம் சட்டசபை தேர்தலில் இச்சமூகத்தின் ஓட்டுகளை பெருமளவில் பெற்று அதிக எம்.எல்.ஏ.,க்களை பெற முடியும் என்ற நம்பிக்கையில் பழனிசாமி உள்ளார்.

போட்டா போட்டி

இதன்அடிப்படையில் அகமுடையார் சமூகத்தைச் சேர்ந்த டாக்டர் சரவணன் ராஜ்யசபா 'சீட்' பெற முயற்சித்து வருகிறார். இவர் 2024 தேர்தலில் மதுரை லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு, கட்சியில் 'உள்குத்து' வேலைகளால் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டவர். பழனிசாமியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அடிக்கடி சேலத்திற்கே சென்று பழனிசாமி பெயரில் நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதேசமயம் கட்சியின் ஐ.டி., விங்க்கை இயக்கி வரும் ராஜ்சத்யனும் காய் நகர்த்தி வருகிறார். இவர் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரும் 2019 லோக்சபா தேர்தலில் மதுரை வேட்பாளராக போட்டியிட்டவர்.

வீணாகும் பதவிகள்

கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது: இரட்டை தலைமை இருந்தபோது வைத்திலிங்கமும், முனுசாமியும் எம்.பி.,க்களாக்கப்பட்டனர். சட்டசபை தேர்தலின்போது 'வெற்றி பெற்றால் அமைச்சர் பதவி' என்ற ஆசையில் பதவி முடிய ஓராண்டு இருக்கும் முன்பே வைத்திலிங்கமும், 5 ஆண்டுகள் இருக்கும் நிலையில் முனுசாமியும் எம்.பி., பதவியை ராஜினாமா செய்தனர். அதேபோல் வரும் சட்டசபை தேர்தலில் சி.வி.சண்முகமும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட வாய்ப்புண்டு. இப்படி அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., பதவிகள் வீணாவதை தவிர்க்க சீனியர்களுக்கு வாய்ப்பு தராமல், விசுவாசமாக உள்ளவர்களுக்கு வழங்க பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை