மேலும் செய்திகள்
மனைவிக்கு ஜீவனாம்சம் தராத கணவனுக்கு 'காப்பு'
02-Sep-2024
சென்னை:'விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும்போது, முஸ்லிம் பெண்ணுக்கு இடைக்கால ஜீவனாம்சம் வழங்கி, குடும்ப நல நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்லாமிய தம்பதிக்கு, 2015ல் திருமணம் நடந்தது. ஒரு பெண் குழந்தையும் உள்ளது. திருமணத்தின்போது, தனியார் நிறுவனத்தில் பெண் பணியாற்றினார். கணவர், கர்நாடகாவில் உள்ள மருத்துவக் கல்லுாரியில் பணியாற்றுகிறார். இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. சுமுக தீர்வுக்கு சாத்தியமில்லாததால், முஸ்லிம் திருமண முறிவு சட்டத்தின் கீழ், உதகை நீதிமன்றத்தில் மனைவி வழக்கு தொடர்ந்தார். வலியுறுத்தல்
இடைக்கால மனுவில், 'குழந்தையின் நலனில் கணவருக்கு அக்கறை இல்லை; அவளது படிப்பு செலவையும் கவனிப்பதில்லை; தற்போது எனக்கு வேலை இல்லை; மாத சம்பளமாக, 2.50 லட்சம் ரூபாய் கணவர் வாங்குவதால், இடைக்கால ஜீவனாம்சமாக, 50,000 ரூபாய் தர உத்தரவிட வேண்டும்' என கோரினார்.மனுவை விசாரித்த உதகை நீதிமன்றம், மாதம், 20,000 ரூபாய் மனைவிக்கு வழங்க, கணவருக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் கணவர் வழக்கு தொடர்ந்தார். இடைக்கால ஜீவனாம்சம் வழங்க, சிவில் நடைமுறை சட்டத்தை பயன்படுத்த முடியாது என்பதால், உதகை நீதிமன்றத்துக்கு உத்தரவிட அதிகாரம் இல்லை என, கூறப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி வி.லட்சுமிநாராயணன் பிறப்பித்த உத்தரவு:இந்த வழக்கை பொறுத்தவரை, இருவருக்கும் இடையே நடந்த திருமணம் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது; அவர்களுக்கு குழந்தையும் உள்ளது. குழந்தையையும், மனைவியையும் பராமரிக்க வேண்டிய கடமை கணவனுக்கு உள்ளது. முஸ்லிம் திருமண முறிவு சட்டத்திலும், கணவனுக்கான கடமை வலியுறுத்தப்பட்டுள்ளது.கடந்த 1939ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட மத்திய சட்டத்தில், இடைக்கால ஜீவனாம்சம் வழங்க எந்த பிரிவும் இல்லை என்பதற்காக, நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என்ற அர்த்தம் அல்ல. அரசியலமைப்பு சட்டம், ஒவ்வொரு குடிமகனுக்கும் சமூக, பொருளாதார, அரசியல் உரிமையை வழங்கி உள்ளது.தன்னை பராமரித்துக்கொள்ள முடியவில்லை என மனைவி கேட்கும்போது, கண்களை மூடிக்கொண்டு நீதிமன்றம் இருக்க முடியாது. இடைக்கால ஜீவனாம்சம் வழங்க அதிகாரம் இல்லை என, மனுதாரர் தரப்பு வாதத்தை ஏற்றால், கண்ணியமாக, நாகரிகமாக வாழும் உரிமைக்காக மனைவி அலைக்கழிக்க வேண்டியதிருக்கும். பிரத்யேக அதிகாரம்
கணவரிடம் இருந்து பிரிந்து விட்டதால், தனக்கான செலவை மனைவியே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற அர்த்தம் அல்ல; முஸ்லிம் சமூகத்தில் மனைவி பிரிந்து விட்டதால், ஜீவனாம்சம் பெற அவருக்கு தகுதியில்லை என்ற அர்த்தமும் அல்ல. குழந்தையையும், தன்னையும் பராமரித்துக்கொள்ள முடியாததால், மனைவி ஜீவனாம்சம் கோருகிறார். அவருக்கு தர மறுத்தால், சம வாய்ப்பை மற்றும் நீதியை வழங்குவதாக கருத முடியாது.இடைக்கால ஜீவனாம்சம் வழங்குவதன் நோக்கமே, மனைவி வாழவும், வழக்கை எதிர்கொள்ளவும் தான். ஜீவனாம்சம் வழங்குவதன் வாயிலாக, சம வாய்ப்பை வழங்கி, ஆடுகளத்தை சம அளவில் வைப்பதற்கும் தான். போதிய ஜீவனாம்சத்தை வழங்கினால் தான், வழக்கில் அவரால் கவனம் செலுத்த முடியும்.குழந்தையை வளர்ப்பதற்காக முறையான சூழலை வழங்க வேண்டியது தந்தையின் கடமை. மனைவியிடம் இருந்து பிரிவதற்கு உரிய காரணங்கள் இருக்கிறதா என்பது, வழக்கு விசாரணையின் போது நிரூபிக்கப்பட வேண்டியது. இடைக்கால ஜீவனாம்சம் கோர, சிவில் நடைமுறை சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க மனைவிக்கு உரிமை உள்ளது. இடைக்கால ஜீவனாம்சம் வழங்க, நீதிமன்றத்துக்கு பிரத்யேக அதிகாரம் உள்ளது.எனவே, மனைவிக்கும், குழந்தைக்கும், இடைக்கால ஜீவனாம்சம் வழங்கி, உதகை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டதை, நியாயமற்றது எனக்கூற முடியாது; மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
02-Sep-2024