உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீஸ் - பஸ் ஊழியர்கள் மோதல் வலுக்கிறது: அரசு பஸ்களுக்கு அபராதம் விதிப்பு

போலீஸ் - பஸ் ஊழியர்கள் மோதல் வலுக்கிறது: அரசு பஸ்களுக்கு அபராதம் விதிப்பு

மதுரை : அரசு பஸ்சில் போலீசார் பணி நிமித்தமாக செல்லும்போது வாரன்ட் இல்லாத பட்சத்தில், கட்டணம் செலுத்த வேண்டும் என போக்குவரத்து துறை அறிவித்ததால் கொதிப்படைந்த போலீசார், விதிமீறும் அரசு பஸ்களுக்கு அபராதம் விதிக்க துவங்கி உள்ளனர். திருநெல்வேலி - துாத்துக்குடி அரசு பஸ்சில் சீருடையுடன் போலீஸ்காரர் ஆறுமுகபாண்டி பயணித்தார். பணி நிமித்தமாக செல்வதால் கட்டணம் எடுக்க முடியாது என அவர் கூற, 'வாரன்ட் இருந்தால் மட்டுமே கட்டணமில்லாமல் பயணிக்க முடியும்' என கண்டக்டர் கூற இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின், ஆறுமுகபாண்டி கட்டணம் செலுத்தி பயணித்தார். இது குறித்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது.தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட போக்குவரத்து துறை, 'வாரன்ட் இருந்தால் மட்டுமே கட்டணமின்றி பயணிக்க முடியும்' என அறிவுறுத்துமாறு போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தது. இதனால் கடுப்பான போலீஸ் உயர் அதிகாரிகள் சிலர், 'அரசு பஸ்களை தவறான முறையில் இயக்கினால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அபராதம் விதிக்க வேண்டும்' என வாய்மொழியாக உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.இதையடுத்து, நேற்று முதல் திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் போக்குவரத்து விதி மீறிய அரசு பஸ்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். அதேபோல், செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமந்த்குமார் தலைமையிலான போக்குவரத்து போலீசார், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் எதிரில், சாலையோரம் பேருந்தை நிறுத்தி பயணியரை இறக்கிய நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களுக்கு, 1,000 ரூபாய் அபராதம் விதித்தனர். போலீசார் கூறியதாவது: பணி நிமித்தமாக சீருடையுடன் நாங்கள் செல்லும் போது டவுன் பஸ்களில் கட்டணம் வசூலிப்பதில்லை. வெளியூர் பஸ்களில் சில கட்சி சார்ந்த கண்டக்டர்கள் கட்டணம் கேட்டு பிரச்னை செய்கின்றனர். போலீசார், அரசு பணிக்காக அரசு பஸ்சில் செல்லும்போது கட்டணம் செலுத்த தேவை இல்லை என போக்குவரத்து துறைக்கு அரசு அறிவுறுத்த வேண்டும்.இதுபோன்ற குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க போலீசாருக்கு, 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதை உடனடியாக அமல்படுத்தினால் மட்டுமே தொடரும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ponssasi
மே 24, 2024 16:24

காவலர்களின் ஊதியம் குறைந்தது ஐம்பதாயிரம் முதல் இரண்டு லட்சம். அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்கக்கூட இவர்களுக்கு தகுதி இல்லை போலும். கிளாம்பாக்கம் எதிரில் நின்ற பேருந்துகளுக்கு அபராதம் விதித்த காவலர் வாகனம் எங்கு நிறுத்தப்பட்டிருந்தது. அதற்கு அபராதம் விதிப்பது யார்? காவலர்கள் நிறுத்தும் வாகனங்கள் பெரும்பாலும் சாலை ஓரங்களில் தான்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை