| ADDED : மே 16, 2024 12:49 AM
சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் இயக்கப்படும் 3,454 பேருந்துகளில் தினமும் 32 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர்.மாநகர பேருந்துகளில் அதிநவீன ஜி.பி.எஸ்., கருவிகள் நிறுவுதல், கண்காணிப்பு கட்டுபாட்டு அறை அமைப்பு, பேருந்து நிறுத்தங்களில் டிஜிட்டல் பலகைகள் நிறுவும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.ஓமந்துாரார் அரசினர் தோட்டம் பேருந்து நிறுத்தம் மற்றும் எழும்பூரில் கோ - ஆப்டெக்ஸ் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் டிஜிட்டல் பலகை அமைத்து, சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது:நுண்ணறிவு போக்குவரத்து திட்டத்தின் கீழ் 'சிட்டி பஸ் சிஸ்டம்' என்ற புதிய முறையை செயல்படுத்தி வருகிறோம்.பேருந்து வருகை, புறப்பாடு நேரம் குறித்து, பயணியர் தகவல் பெறும் வகையில், 500 பேருந்து மற்றும் 71 பேருந்து நிலையங்களில் எல்.இ.டி., டிஜிட்டல் பலகைகள் அமைக்கப்பட உள்ளன.பயணியர் தங்களது மொபைல்போன் செயலி வாயிலாகவும் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம். மேலும் நிர்வாகம், பேருந்துகளை சீராக இயக்குவதோடு, ஒரே வழித்தடத்தில், ஒரே நேரத்தில் மாநகர பேருந்துகள் வரிசையாக செல்வதை தவிர்க்க முடியும்.இந்த திட்டத்தின் சோதனை முயற்சி, இரண்டு நிறுத்தங்களில் நடக்கிறது. அடுத்த சில வாரங்களுக்கு இந்த சோதனை மேற்கொண்டு, செயல்பாடுகளை ஆய்வு செய்ய உள்ளோம். சோதனைக்கு பின், முதற்கட்டமாக 50 பேருந்து நிறுத்தங்களில் டிஜிட்டல் பலகை அமைக்க உள்ளோம்.