| ADDED : ஏப் 23, 2024 11:51 PM
சென்னை:'செயற்கை நுண்ண றிவு தொழில்நுட்பம் வாயிலாக, சிவில் சர்வீசஸ் தேர்வின் கேள்வித்தாள்களை மாநில மொழிகளில் வழங்குவது குறித்து, மத்திய அரசு பரிசீலிக்கலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.மதுரையைச் சேர்ந்த எஸ்.பாலமுருகன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகளை, மாநில மொழிகளில் எழுத அனுமதி உள்ளது. 'கேள்வித்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் மட்டுமே வழங்கப்படுகின்றன. 'அரசியலமைப்பு சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும், கேள்வித்தாள்களை வழங்க உத்தரவிட வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு தரப்பில் பதில் அளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து விசாரணையை, ஜூன் 28க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.அப்போது, 'செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக, எளிதாக மொழி பெயர்ப்பு செய்யலாம்; மொழி பெயர்ப்பு 100 சதவீதம் சரியாக இல்லாவிட்டாலும், அதை சரி செய்து கொள்ள முடியும். மத்திய அரசு இதை பரிசீலிக்க வேண்டும்' என, முதல் பெஞ்ச் யோசனை தெரிவித்தது.