விஜய்யை நம்பும் ரங்கசாமி நாராயணசாமி புது தகவல்
துாத்துக்குடி:புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி திருச்செந்துாரில் சுவாமி தரிசனம் செய்த பின் அளித்த பேட்டி:இலங்கை கடற்படையினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்க, தமிழக முதல்வர் எடுக்கும் பல முயற்சிகளில் ஒன்றுக்குக்கூட பிரதமர் மோடி முயல்வதில்லை. புதுச்சேரியில் கவர்னராக இருந்த கிரண் பேடி, முதல்வராக இருந்த என்னை தொடர்ந்து பணி செய்ய விடாமல் தடுத்தார். அவரைப் போலவே இப்போது தமிழக கவர்னர் ரவியும், முதல்வர் ஸ்டாலினை பணி செய்ய விடாமல் இடைஞ்சல் கொடுத்து வருகிறார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அரசியல் தடுமாறி, தடம் மாறி செல்கிறார். அவரை பா.ஜ., கைவிட்டு விட்டது. புதிதாக கட்சி துவங்கும் விஜய்யுடன் கூட்டு சேர்ந்தாவது கரை சேர்ந்து விடலாம் என நினைக்கிறார். அவர் என்ன செய்தாலும், புதுச்சேரியில் இனி தேறுவது கடினம். தமிழகத்தில் எம்.ஜி.ஆரை தவிர, வேறு எந்த நடிகரும் கட்சி ஆரம்பித்து நிலைக்கவில்லை. சில காலத்தில் காணாமல் போய் விடுவர். நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பதால் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அதனால் அவர்களை கண்டு காங்., அஞ்சாது. மக்கள் நடிகர்களை பார்த்து ஓட்டு போடுவதில்லை. அதற்கான காலமெல்லாம் மாறிவிட்டது. சினிமாவில் மட்டுமல்ல, எந்த துறையாக இருந்தாலும் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.