காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நகை வியாபாரியிடம் 72 பவுன் நகை,7 கிலோ வெள்ளியை கொள்ளையடித்து சென்ற வழக்கில், சிவகங்கை அருகே கீழக்குளத்தை சேர்ந்த சாந்தகுமாரை 29, காலில் மாவு கட்டுடன் போலீசார் கைது செய்தனர்.காரைக்குடி, சுந்தரம் செட்டியார் தெரு நகை வியாபாரி சரவணன் 41. இவர், மே 21 சென்னையில் இருந்து காரைக்குடிக்கு பஸ்சில் 72 பவுன் நகை, 7 கிலோ வெள்ளியுடன் வந்துள்ளார். அவற்றுடன் வீட்டிற்கு நடந்து சென்றார். ஐந்துவிளக்கு அருகே 2 டூவீலரில் வந்த 5 மர்ம நபர்கள், இவரிடம் ஆயுதங்களை காண்பித்து மிரட்டி தாக்கி நகை, வெள்ளியை கொள்ளையடித்தனர். அவரது வீட்டை ஒட்டி பொருத்தியுள்ள 'சிசிடிவி' கேமராவில் கிடைத்த ஆதாரங்களின் படி கொள்ளையில் ஈடுபட்டது சிவகங்கை அருகே கீழக்குளம் சாந்தகுமார் 29 என்பதை உறுதி செய்தனர். காரைக்குடி குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்து, திருடிய நகை, வெள்ளி மற்றும் ஆயுதத்தை பறிமுதல் செய்தனர். மேலும் சாந்தகுமாரிடம் திருட்டு நகைகளை வாங்கிய காரைக்குடி அண்ணாநகர் ஜெயக்குமார் 30, ஆறுமுக நகர் கண்ணன் 35 ஆகிய இருவரையும் கைது செய்தனர். ரூ.9 லட்சம் நகை மீட்பு
காரைக்குடி டி.எஸ்.பி., பிரகாஷ் கூறியதாவது: சிவகங்கை அருகே களத்துார் மந்தையில் சாந்தகுமார் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. விசாரணைக்கு அழைத்து வந்தபோது, பாலத்தில் இருந்து குதித்துவிட்டார். காலில் மாவு கட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரிடமிருந்து 12 பவுன் செயின், 4 வெள்ளி கட்டிகளை பறிமுதல் செய்தோம். காரைக்குடியை சேர்ந்த ஜெயக்குமார், கண்ணனிடம் விற்பனை செய்ய கொடுத்து வைத்த 18 பவுன் செயின் என இது வரை ரூ.9 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், ரூ.56 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி கட்டிகளை பறிமுதல் செய்துள்ளோம்.இவர் மீது கொலை, கொலை முயற்சி, வீடுகளில் கொள்ளை உட்பட 16 வழக்குகள் உள்ளன. இதில் தொடர்புடைய மற்றவர்களை பிடிக்க தனிப்படை வேகமாக செயல்பட்டு வருகிறது என்றார். இன்ஸ்பெக்டர்கள் ரவீந்திரன், இளவரசி, கணேசமூர்த்தி உடனிருந்தனர்.