உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கரும்பு நடவுக்கு ரூ.15,000 மானியம் பட்ஜெட் கூட்டத்தில் வலியுறுத்தல்

கரும்பு நடவுக்கு ரூ.15,000 மானியம் பட்ஜெட் கூட்டத்தில் வலியுறுத்தல்

சென்னை:'கரும்பு சாகுபடி பரப்பு குறைந்து வருவதால், நடவுப் பணிக்கு மானியமாக, ஏக்கருக்கு 15,000 ரூபாய் வழங்க வேண்டும்' என, வேளாண் பட்ஜெட் கருத்துக் கேட்பு கூட்டத்தில், விவசாயிகள் வலியுறுத்தினர்.தமிழக சட்டசபையில், வேளாண் பட்ஜெட் 15ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக, தமிழகம் முழுதும், விவசாயிகள், வணிகர்கள் உள்ளிட்டோரிடம், கருத்து கேட்கப்படுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில், நேற்று கருத்துக் கேட்பு கூட்டம் நடந்தது. வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், செயலர் தட்சிணாமூர்த்தி, நிதித்துறை செயலர் உதயசந்திரன் உள்ளிட்டோர் கருத்துகளை கேட்டறிந்தனர்.கூட்டத்தில், விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் பங்கேற்று, பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அதன் விபரம்:ராஜேந்திரன், பொதுச்செயலர், இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு: நெல் கொள்முதலின்போது, மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலை, மாநில அரசின் ஊக்கத்தொகை ஆகியவை, ஒரே நேரத்தில், விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதேபோல், கரும்புக்கு சர்க்கரை ஆலைகள் வழங்கும் விலையுடன், தமிழக அரசு சிறப்பு ஊக்கத் தொகையை சேர்த்து வழங்க வேண்டும். கரும்பு உற்பத்தி குறைந்து வருவதால், சர்க்கரை ஆலைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. எனவே, கரும்பு உற்பத்தியை அதிகரிக்க, நடவு பணிக்கு, 15,000 ரூபாய் மானியம் வழங்க வேண்டும்.ஆஞ்சநேயலு, திருவள்ளூர் மாவட்ட தலைவர், அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு: திருவள்ளூர் மாவட்டத்தில், விவசாயத் தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது. சென்னையை ஒட்டி உள்ளதால், அங்குள்ள தொழிற்சாலைகளுக்கு, தொழிலாளர்கள் சென்று விடுகின்றனர். தஞ்சை மாவட்டத்திற்கு இணையாக, திருவள்ளூரில் முப்போகம் நெல் விளைகிறது. தொழிலாளர் பற்றாக்குறையால், நெல் உற்பத்தி பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே, டெல்டா மாவட்டங்களைப் போல், திருவள்ளூர் மாவட்டத்திற்கும், மானிய விலையில், வேளாண் இயந்திரங்கள், டிராக்டர்கள், அறுவடை இயந்திரங்கள் வழங்க, சிறப்பு திட்டங்கள் அறிவிக்க வேண்டும்.வடகிழக்கு பருவ மழையில் பயிர்கள் பாதிப்பது முக்கிய பிரச்னையாக உள்ளது. நீர்நிலைகள் ஆக்கிரமிப்பால் வயல்களில் வெள்ளம் சூழ்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை