திருவண்ணாமலை:திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி, 54; விவசாயி. இவரது மகன் மணிகண்டன், 25; பட்டதாரி. ஜமுனாமரத்துாரைச் சேர்ந்தவர் அன்பு, 52. இவர், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில், மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரராக பணிபுரிந்து வருகிறார்.அன்புவும், கோவிந்தசாமியும் ஒரே பகுதி என்பதால் பழக்கம் ஏற்பட்டது. அப்போது, அன்பு, 'ஜவ்வாதுமலை வீரப்பனுாரைச் சேர்ந்த விக்னேஷ், 37, சி.பி.ஐ., இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். அவர் மத்திய அரசில் பலருக்கு வேலை வாங்கிக் கொடுத்துள்ளார். உன் மகன் மணிகண்டனுக்கு அவரிடம் கூறி, அரசு வேலை வாங்கி தருகிறேன்' என, கூறியுள்ளார்.நம்பிய கோவிந்தசாமி, விக்னேஷை சந்தித்து, தன் மகனுக்கு அரசு வேலை வாங்கித் தரும்படி கேட்டு, கடந்தாண்டு டிசம்பரில் இரு தவணைகளாக, விக்னேஷ் வங்கி கணக்கிற்கு, 9.95 லட்சம் ரூபாய் அனுப்பினார்.வேலை வாங்கித் தராததால் சந்தேகமடைந்த கோவிந்தசாமி விசாரித்ததில், விக்னேஷ் சி.பி.ஐ.,யில் வேலை செய்யாமல், பலரிடம் மத்திய அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 1.96 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்தது தெரியவந்தது.கோவிந்தசாமி புகாரின்படி, திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள விக்னேஷ், அன்பு ஆகியோரை தேடி வருகின்றனர்.